தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகளிடமிருந்து கருத்து கேட்பு கூட்டம் இன்று (ஜூன் 8) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் திருச்சி, அரியலூர், மயிலாடுதுறை, கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் வரவேற்று பேசினார். தொடர்ந்து, தொடக்க உரையாற்றிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், "குறுவை சாகுபடியில் விவசாயிகளுக்கு என்னென்ன உதவிகள் தேவை, அதேபோல் விவசாயிகளின் பிரச்சனைகள் என்னென்ன என்பதை தெரிந்து அதனை தீர்த்து வைக்கும் விதமாக கடந்த இரு ஆண்டுகளாக குறுவை சாகுபடிக்கு முன்பாக ஆய்வு கூட்டம் விவசாயிகளைக் கொண்டு நடத்தப்பட்டது.
அதேபோல் மூன்றாவது ஆண்டாக இந்த ஆண்டும் இக்கூட்டம் நடைபெறுகிறது. வருகிற 12-ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படவிருக்கும் நிலையில் சாகுபடிக்கு தேவையான வசதிகள் குறித்து விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை தொடர்புடைய கூட்டுறவு, வேளாண்மை, நுகர்பொருள் வாணிபக் கழக துறைகளைச் சார்ந்த அதிகாரிகளை கொண்டு அந்தந்த துறை சார்ந்த குறைகளை தீர்த்து வைக்கும் விதமாக இந்த கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் தெரிவிக்கும் கருத்துக்களை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று அதை உடனடியாக தீர்த்து வைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அதேபோல் பருவ மழையை எதிர்கொள்ளும் விதமாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது குறித்தும் கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட உள்ளது" என்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “குறுவைப் பருவத்தில் 2018 ஆம் ஆண்டு 3.26 லட்சம் ஏக்கரிலும், 2019 ஆம் ஆண்டில் 2.91 லட்சம் ஏக்கரிலும், 2020 ஆம் ஆண்டில் 4.70 லட்சம் ஏக்கரிலும், 2021 ஆம் ஆண்டில் 4.91 லட்சம் ஏக்கரிலும், 2022 ஆம் ஆண்டில் 5.36 லட்சம் ஏக்கரிலும் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தமிழக முதல்வர் அறிவித்த குறுவை தொகுப்பு திட்டம் காரணமாக கடந்த 2 ஆண்டுகளில் சாகுபடி பரப்பு அதிகரித்தது. நிகழாண்டு 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்படும்.
இதற்காக 4 ஆயிரத்து 45 டன்கள் விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மேலும் 4 ஆயிரத்து 46 டன்கள் விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதேபோல யூரியா, டிஏபி போன்ற உரங்கள் ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 289 டன்கள் கையிருப்பில் உள்ளன. அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்வதற்கு அரசு தயார் நிலையில் உள்ளது. தேவையான இடங்களில் நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படும்.
மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பாக தூர் வாரும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்காக மூத்த ஐஏஎஸ் அலுவலர்களைக் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தியுள்ளார். இந்தப் பணிகளைத் தமிழக முதல்வர் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்ய உள்ளார்.
மேட்டூர் அணையில் தற்போது போதுமான அளவுக்கு நீர் இருப்பு உள்ளது. நமக்குரிய நீரை கர்நாடகத்திடமிருந்து தமிழக முதல்வர் பெற்றுத் தர சட்டப்படி நடவடிக்கை எடுப்பார் என்றார்.
செய்தியாளர் க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“