Vellore loksabha election : வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரத்தில், முதல்வர் பழனிசாமி, திமுகவையும் , திமுக தலைவர் ஸ்டாலின், அதிமுகவையும் போட்டி போட்டு குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
வேலூர் மக்களவை தேர்தல் ஆகஸ்ட் 5ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அங்கு பிரசாரம் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. முதல்வர் பழனிசாமி அணைக்கட்டு உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியதாவது, திமுக வேட்பாளருக்கு நெருக்கமானவரிடம் கட்டுக்கட்டாக பணம் கைப்பற்றப்பட்டதால் வேலூர் தேர்தல் நிறுத்தப்பட்டது. தலைவர் மகனே தலைவராவது தான் வாரிசு அரசியல். உதயநிதியை தலைவராக்குவதற்காகவே சில திரைப்படங்களில் நடிக்க வைத்தனர். பெற்ற குழந்தைகளாக கருதி, மாணவர்களுக்கு சைக்கிள்களை வழங்கியவர் ஜெயலலிதா, அந்த சைக்கிளின் வண்ணத்தை மட்டும் மாற்றி அதே திட்டத்தை தொடர்ந்தவர் கருணாநிதி.
எந்த அவதாரம் எடுத்தாலும் ஆட்சியை கலைக்க முடியாது .ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் மறந்து விடுங்கள், எந்த காலத்திலும் ஆட்சியை கலைக்க முடியாது. மைச்சர் பதவி கொடுப்பதாக 18 எம்.எல்.ஏக்களை ஏமாற்றினார் ஸ்டாலின், இப்போது 18 பேரும் வீதியில் நிற்கின்றனர். திமுக எது செய்தாலும் அதிமுக அஞ்சாது என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் பேசியதாவது , வேலூர் மாவட்டத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை திமுக தான் கொண்டுவந்தது. ஆனால் திட்டத்தை விரிவுபடுத்தாமல் கிடப்பில் போட்டது அதிமுக அரசு.திமுக வெற்றி பெற்றால் அனைத்து பகுதிகளுக்கும் குடிநீர் திட்டத்தை விரிவுப்படுத்த அழுத்தம் தரப்படும்.
ஆட்சிக்கு வந்ததும் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து குற்றவாளிகளை சிறையில் தள்ளுவோம் .
அப்துல்கலாமை கருணாநிதி விமர்சித்ததாக ஓபிஎஸ் கூறுகிறார், அதை நிரூபிக்க தயாரா? - மண்டபத்தில் பிரசாரம் செய்ததால் மண்டபத்திற்கு சீல் வைத்தனர், சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்றுவிடுமா என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
வேலூர் மக்களவை தேர்தல் பிரசாரத்தில் அனல் பறக்கும் அளவிற்கு தலைவர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர். வேலூர் மக்களவை தேர்தல் முடிவுகள் 9ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.