முல்லைப் பெரியாறு அணை : சென்னையில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார். காவிரியில் அதிக அளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி இந்த ஆலோசனையை மேற்கொண்டார்.
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், கரையோர மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது. மேலும் வெள்ளத்தடுப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள், மீட்பு குழுவினர், தேவையான நிவாரண பொருட்கள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்து கொள்ளுமாறு இந்த ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கட்டப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 142 அடியை எட்டியது. இதையடுத்து, அணையின் 13 மதகுகள் திறக்கப்பட்டு கேரளாவுக்கு விநாடிக்கு 11,000 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் இடுக்கி அணைக்கு செல்கிறது. அந்த அணையும் ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டியுள்ளதால், செருதோணி அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியில் இருந்து 136 அடியாக குறைக்க வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று கடிதம் எழுதியிருந்தார். அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் தேக்க கொள்ளளவை குறைக்க வேண்டும் என கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்தச் சூழ்நிலையில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம் எழுதியுள்ளார். அணை பாதுகாப்பாக உள்ளதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 142 அடி தேக்கப்படுவதாகவும், இதனால் அணையின் நீர்மட்டத்தை குறைக்க தேவையில்லை என்றும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.