பட்ஜெட் குறித்து பட்டும் படாமலும் கருத்து தெரிவித்த முதல்வர் பழனிசாமி! ஸ்டாலின் காரசாரம்!

தேசிய சமூக நலத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அது இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது

மத்திய பட்ஜெட் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜி.எஸ்.டி அமல்படுத்தப்பட்ட பிறகு, தாக்கலாகும் முதல் பட்ஜெட் இதுவாகும். அதேபோல் மத்திய அரசின் பதவிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முழுமையான கடைசி பட்ஜெட் இதுவாகும். நடுநிலையான, வளர்ச்சியை நோக்கிய பட்ஜெட்டாக இது தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாய வளர்ச்சி, ஊரக வளர்ச்சி, சுகாதரத்துறை வளர்ச்சி ஆகியவற்றை இலக்காகக் கொண்ட பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.

மத்திய பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. பெரும் நிறுவன வரி 25 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது நல்ல விஷயமாகும். இதன்மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பயன்பெறும். அதேசமயம், வருமான வரி உச்சவரம்பைக் குறைக்க வேண்டுமென்று தமிழக அரசு கேட்டுக்கொள்கிறது. அதை ஏற்று மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று தமிழக அரசு நம்புகிறது. தேசிய சமூக நலத்திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு உயர்த்தப்படும் என்று நாங்கள் நம்பினோம். ஆனால், அது இப்போதும் அதே நிலையில்தான் இருக்கிறது. இந்தத் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் ஓய்வூதியம் ரூ.200 முதல் ரூ.300 வரையே வழங்கப்படுகிறது. அதை ரூ.1000-மாக உயர்த்த வேண்டுமென்று நாங்கள் கோரிக்கை வைத்திருந்தோம். அந்தக் கோரிக்கை கண்டுகொள்ளப்படவில்லை. சென்னையில் புறநகர் ரயில் திட்ட நீட்டிப்பு குறித்து மத்திய அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்படவில்லை” என்று கூறியுள்ளார்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவரும் திமுக செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் பட்ஜெட் குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2014 தேர்தலின் போது வெளியிட்ட வாக்குறுதிகள் என்ன? வெளியிட்ட அறிவிப்புகள் என்ன? பாஜக ஒருமுறை தன்னை சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். தமிழகத்திற்கு அறிவித்த எய்ம்ஸ் மருத்துவமனை இதுவரை வரவில்லை. பட்ஜெட்டில் தமிழக மக்களின் நலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தி.மு.க., சார்பில் இதற்கு கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பட்ஜெட்டில் அமைப்புசாரா தொழிலாளர் நலனுக்கான திட்டம் ஏதும் இல்லை. பட்ஜெட்டில் விவசாயிகளின் முன்னேற்றத்துக்கு தீர்வு காணாதது ஏமாற்றம் அளிக்கிறது. மொத்தத்தில் மத்திய பட்ஜெட் வெறும் அலங்கார அணிவகுப்புகளின் தொகுப்பாகவே உள்ளது” என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

×Close
×Close