Advertisment

இரண்டு வழக்குகளில் தீர்ப்பு: 'மகிழ்ச்சி' - முதல்வர்! 'சட்டப் போராட்டம் தொடரும்' - எதிர்க்கட்சித் தலைவர்!

உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இரண்டு வழக்குகளில் தீர்ப்பு: 'மகிழ்ச்சி' - முதல்வர்! 'சட்டப் போராட்டம் தொடரும்' - எதிர்க்கட்சித் தலைவர்!

ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் கடந்த 2017 பிப்ரவரி மாதம் எடப்பாடி அரசுக்கு எதிராக சட்டமன்றத்தில் வாக்களித்தனர். இதுகுறித்து ஐகோர்ட்டில் வழக்குப் பதிந்த திமுக கொறடா சக்கரபாணி, ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்ய சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

Advertisment

இந்நிலையில், ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி தி.மு.க. கொறடா சக்கரபாணி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை தள்ளுபடி செய்து தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு இன்று தீர்ப்பளித்தது.

அதுமட்டுமின்றி, சட்டசபையில் ஜெயலலிதா படத்தை சபாநாயகர் தனபால் கடந்த பிப்ரவரி 12ம்தேதி திறந்து வைத்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என உச்சநீதிமன்றம் உறுதி செய்திருப்பதால் அவரது படத்தை திறக்க கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து, சட்டசபையில் ஜெயலலிதா படம் திறக்கப்பட்டதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. அன்பழகன் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கிலும் இன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் பெஞ்ச், சட்டப்பேரவையில் இருந்து ஜெயலலிதா படத்தை அகற்ற உத்தரவிட முடியாது. சபாநாயகரின் முடிவில் தலையிட முடியாது. நீதித்துறையை எளிதாக அணுகும் முறையை இது போன்ற வழக்குகளால் தவறாக பயன்படுத்தக் கூடாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், "ஜெயலலிதா புகைப்பட வழக்கு, 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு என இரண்டிலும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது" என்றார்.

அதேபோன்று, எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சாதாரண மக்களின் நம்பிக்கைக்குரிய ஜனநாயக அமைப்பு நீதிமன்றம். அதன்மீது அனைத்துத் தரப்பினரும் நம்பிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில், தமிழகத்தில் ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வின் (ஓ.பி.எஸ்.அணி) எம்.எல்.ஏக்கள் 11 பேரின் தகுதி நீக்கம் கோரும் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், “எம்.எல்.ஏ.,க்கள் மீது என்ன நடவடிக்கை எடுப்பது என சபாநாயகருக்கு நீதிமன்றம் அறிவுறுத்த முடியாது”, எனத் தெரிவித்துள்ளது.

சொத்துக் குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தாலேயே குற்றம் நிரூபிக்கப்பட்ட ஏ-1 ஜெயலலிதா அம்மையாரின் படம் சட்டமன்றத்தில் திறந்து வைக்கப்பட்டதை எதிர்த்து தி.மு.கழகம் சார்பில் தொடரப்பட்ட வழக்கிலும் தலையிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தலையிட முடியாத நிலையில், எதற்காக மனுக்களை விசாரணைக்கு எடுத்து, இத்தனை காலம் தீர்ப்பினை தள்ளி வைத்திருக்கவேண்டும் என்பதே சாதாரண மக்களின் கேள்வியாகும்.

அந்தக் கேள்வியை பிரதிபலிக்கும் பொருட்டு, நீதித்துறை மீது கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சட்டப் போராட்டம் தொடரும்.” என தெரிவித்துள்ளார்.

Mk Stalin Central Government Cauvery Management Board
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment