நானும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இணைந்தே செயல்படுகிறோம் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "தண்ணீர் தட்டுப்பாடுகளை கவனித்து நடவடிக்கை மேற்கொள்ள ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பருவமழை பெய்யாததால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை சரிசெய்து மக்களுக்கு தடையில்லாமல் குடிநீர் வழங்க தேவையான நிதி ஒதுக்கப்பட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜெயலலிதா இருந்த போது மக்களவை தேர்தலில் அதிக இடங்களில் போட்டியிட்டோம். ஆகையால், அதிக வாக்கு சதவிகிதம் பெற்றோம். ஆனால், இம்முறை குறைவான இடங்களில் போட்டியிட்டதால் குறைவான வாக்கு சதவிகிதம் பெற்றிருக்கிறோம்.
மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக நான் எப்போது கருத்து தெரிவித்தேன்? எனது ட்விட்டர் பதிவை எதிர்க்கட்சிகள் திரித்து பரப்பிவிட்டன. அது உண்மையில் வருத்தம் அளிக்கக் கூடிய விஷயமாகும்.
இரு மொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. தமிழ் மொழியை பிற மாநிலத்தவர் பயில வேண்டும் என்றே கோரிக்கை வைத்தேன். வெளி மாநிலத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கையை ஏற்றே ட்விட்டரில் பதிவு செய்தேன்.
7 பேர் விடுதலை தொடர்பான பரிந்துரையை ஆளுநருக்கு அரசு அனுப்பியுள்ளது. நளினியை தவிர 6 பேரையும் விடுவிக்கக் கூடாது என கூறிய திமுகவிற்கு கேள்வி கேட்க உரிமையில்லை.
காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை பின்பற்ற கர்நாடக அரசை ராகுல் காந்தி வலியுறுத்தாதது ஏன்?. தமிழகத்திற்கு நீர் திறக்க திமுக எம்பிக்கள் கர்நாடக அரசை வலியுறுத்துவார்கள் என நம்புகிறேன்.
நானும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், வெளியில் இருந்து அதிமுகவுக்கு திரும்பி வருபவர்களை சேர்ப்பதில் இணைந்தே செயலாற்றுகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.