ஸ்டெர்லைட் போராட்டம்: தூத்துக்குடியில் அமைந்திருக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடந்து வரும் போராட்டம் 100வது நாளை எட்டியுள்ளதால், பேரணி நடத்த போலீஸாரிடம் அனுமதி கேட்டனர்.
பேரணிக்கு போலீஸார் அனுமதி மறுத்து 144 தடை உத்தரவு பிறப்பித்ததையும் மீறி, பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தியதில் பலர் காயமடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கல்வீச்சில் ஈடுபட்டனர். ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரண்டதால் அவர்களை சமாளிக்க முடியாமல் காவல்துறை பின்வாங்கியது.
இதனையடுத்து, போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த 50க்கும் மேற்பட்ட வாகனங்களைச் சூறையாடினர். மேலும், அங்கிருந்த வாகனங்களுக்குப் பொதுமக்கள் தீவைத்தனர். இவர்களைக் கட்டுப்படுத்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் கலந்து கொண்ட சில சமூக அமைப்புகள் தான் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இருப்பினும், போலீசாரின் அடக்குமுறையை கண்டித்து, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்டெர்லைட் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், காவல்துறை வாகனங்களுக்கு தீயிட்டும், ஆட்சியர் அலுவலகத்தில் இருந்த வாகனங்களுக்கு தீ வைத்தும், ஆட்சியர் அலுவலகத்தை கல் வீசியும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இவர்களின் வன்முறையை கட்டுக்குள் கொண்டுவர, தவிர்க்க முடியாத சூழ்நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க நேரிட்டது. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, ஸ்டெர்லைட் பிரச்சனையில் அரசு சட்டப்பூர்வமான மேல் நடவடிக்கை எடுக்கும். இதனை ஏற்று மக்கள் அமைதி காக்க வேண்டும் என தமிழக அரசு வேண்டுகோள் விடுக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.