தப்பியது டெல்டா; இனி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்: முதல்வர் அறிவிப்பு

சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அமைக்கப்படும்” என்று அறித்துள்ளார்.

By: Updated: February 10, 2020, 09:39:03 PM

சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கு அடிக்கல் நாட்டிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அமைக்கப்படும்” என்று அறித்துள்ளார். முதல்வரின் இந்த அறிவிப்பு காவிரி டெல்டா விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் சேலம் மாவட்டம், தலைவாசலில் சர்வதேச கால்நடை ஆராய்ச்சி பூங்கா மற்றும் கால்நடை மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று (ஜனவரி 9) அடிக்கல் நாட்டினார். விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, “தமிழகத்தில் மீத்தேன் திட்டம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றை கொண்டு வந்தது திமுக தான். ஆனால், அதிமுக அரசுதான் கொண்டு வந்தது என்று அவர்கள் போராட்டம் நடத்தி பிரச்னையை கிளப்புகிறார்கள்.

டெல்டா பகுதிகள் கடல் நீர் சார்ந்த பகுதியாக இருக்கிறது. கடல் நீர் நிலத்திற்குள் புகுந்துவிடும் வாய்ப்பு இருப்பதால் இதனை பாதுகாக்க வேண்டியது அவசியம்.

எனவே டெல்டா பகுதியை பாதுகாத்திட ஒரு வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை இங்கு நான் வெளியிட விரும்புகிறேன். காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக மாற்றப்படும். மேலும், சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து இதற்காக தனி சட்டம் இயற்றப்படும். டெல்டாவிவசாயிகளின் குமுறல்களை உணர்வுப்பூர்வமாக தெரிந்துகொண்டு இந்த அறிவிப்பை ஒரு விவசாயி என்ற முறையில் வெளியிடுகிறேன். விவசாயிகள் துன்பங்கள் துயரங்கள் அறவே ஒழிக்கப்பட வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன்.

என்னதான் மத்திய அரசு திட்டம் கொண்டுவந்தாலும் மாநில அரசு தடையில்லா சான்று அளிக்காமல் அங்கு பணிகளைத் தொடர முடியாது. மக்கள் நலனைக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அதிமுக அரசு ஒருபோதும் மக்களுக்கு எதிரான திட்டங்களுக்கு தடையில்லா சான்று வழங்காது.

அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது. பால் உற்பத்தியில் நாட்டிலேயே முன்னணி மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.

அதனால், தமிழகத்தில், திருவண்ணாமலை, திருச்சி, சேலம் ஆகிய மாவட்டங்களில் மேலும் 3 கால்நடை தீவன தொழிற்சாலைகள் அமைக்கப்படும்.

கால்நடை வளர்ப்பு தொழில் அதிக லாபம் ஈட்டும் தொழிலாக உள்ளது. கால்நடை துறைக்கு அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கிராமப் பொருளாதார மேம்பாட்டிற்கு கால்நடை வளர்ப்பு திட்டம் உதவுகிறது. அரசின் திட்டங்களால் கிராமப்புற பொருளாதாரம் மேம்பாடு அடைந்துள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் விவசாயக் கருவிகள் அளிக்கப்பட்டுள்ளன. ஓசூரில் ரூபாய் 20 கோடி செலவில் சர்வதேச மலர் ஏல மையம் அமைக்கப்படுகிறது.” என்று கூறினார்.

காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண்மண்டலமாக அமைக்கப்படும் என்ற முதல்வரின் இந்த அறிவிப்பு காவிரி டெல்டா பகுதி விவசாயிகள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Cm palaniswami declares cauvery delta region a protected agricultural zone

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X