ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்தும் சட்டப் பேரவைக் கூட்டத்தொடர் குறித்தும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் அதிமுகவின் 10 மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுடன் சென்னை மாவட்டம் சேர்த்து 10 மாவட்டங்களைத் தவிர 27 மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 27, 30 தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் ஜனவரி 2 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் திமுக கூட்டணி அதிமுக கூட்டணியை விட அதிக இடங்களைக் கைப்பற்றியுள்ளன. வெற்றி பெற்றவர்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக்கொண்டனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர் செல்வம் தலைமையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் குறித்து 10 மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தருமபுரி, கடலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, பெரம்பலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், அமைச்சர்கள், கருப்பணன், சேவூர் ராமச்சந்திரன், பென்சமின், ஓ.எஸ்.மணியன், செங்கோட்டையன், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் பங்கேற்றனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கட்சியின் பணிகள் குறித்தும், அடுத்து வரக்கூடிய தேர்தல்கள் குறித்தும் இனிவரும் தேர்தல்களை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்தில் கலந்துகொண்ட மாவட்ட நிர்வாகிகள் அமைச்சர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.