நிவர் புயல் காரணமாக சென்னையில் தொடர்ந்து மழை பெய்துவருவதால், பல பகுதிகள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழைநீர் பாதிக்கப்பட்ட இடங்களை முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
நிவர் புயல் இன்று இரவு புதுச்சேரி அருகே கரையைக்க கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை, மயிலாடுதுறை, காரைக்கால், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புயல் பாதிக்க வாய்ப்புள்ள கடலோர மாவட்டங்களில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான் இடங்களில் அமைக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் மழை காரணமாக பல இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதனால், சென்னை மாநகராட்சி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 15 மண்டலங்களில் மொத்தம் 77 நிவாரண முகாம்களை அமைத்துள்ளது. மழை நீரால் பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களுக்கு வந்து பாதுகாப்பாக இருக்குமாறு செனை மாநகராட்சி அறிவித்துள்ளது.
புயல் பாதிப்பு ஏற்படக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கைகளை அமைச்சர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
நிவர் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரி வேகமாக நிரம்பி வந்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் 22 அடி கொள்ளளவை எட்டியவுடன் மழையைப் பொறுத்து ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, செம்பரம்பாக்கம் ஏரியில் 22 அடி நீர் நிரம்பியதும் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது. அடையாறு ஆற்றங்கரையோர பகுதி மக்கள், குன்றத்தூர், திருமுடிவாக்கம், திருநீர்மலை உள்ளிட்ட பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் களப்பணிகள் குறித்து நேரில்சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டேன்.
மக்களுக்கு எவ்வித பாதிப்புமின்றி பணிகளை துரிதமாகவும் கவனமாகவும் மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். pic.twitter.com/8Ukzo5yL2b
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) November 25, 2020
அதே போல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வட சென்னை பகுதிகளில் ஆய்வு செய்தார். பின்னர், பாதிக்கப்பட்ட அப்பகுதியில் உள்ள மக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் சென்னை கிழக்கு மாவட்டத்திற்க்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு நேரில் வருகைதந்து #NiverCyclone காரணமாக நீர் சூழ்ந்த இடங்களை பார்வையிட்டு, நிவாரண உதவிகளை மக்களுக்கு வழங்கினார்
சூழல் மிரட்டுகிறது!
அதிகாரிகளுக்கு ஒத்துழைப்போம்!
மக்களை காப்போம்! pic.twitter.com/TTevzuX8rA
— P.K. Sekar Babu (@PKSekarbabu) November 25, 2020
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று காலை வடசென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சூளை, பெரம்பூர், திருவிக நகர், கொளத்தூர் பகுதிகளுக்குச் சென்று ஆய்வு செய்தார். பின்னர், அப்பகுதி பொதுமக்களிடம் குறைகளைக் கேட்டறிந்த மு.க.ஸ்டாலின், அங்குள்ள பொதுமக்களுக்கு போர்வை, பிரட், உணவு ஆகியவற்றை வழங்கினார். அதோடு, திமுக நிர்வாகிகளிடம் நிவாரணப் பணிகள் குறித்துக் கேட்டறிந்தார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.