சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை நிச்சயம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கட்டப்பட்டுள்ள இரட்டை அடுக்கு மேம்பாலத்தின் ஒரு அடுக்கு திறப்பு விழா இன்று (ஜூன்.7) நடைபெற்றது. புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, "சென்னை - சேலம் இடையேயான 8 வழிச்சாலைத் திட்டத்தை எனது தனிப்பட்ட திட்டமாக பார்க்கக் கூடாது. இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டால் அது இப்பகுதியின் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணியாக விளங்கும். விபத்துகள் மூலம் உயிர் பலிகளை தடுக்க, சுற்று சூழலை பாதுகாக்க, தொழில் வளம் பெருக 8 வழி சாலை அவசியம்.
மக்களிடம் இருந்து நிலங்களை பறித்து 8 வழிச்சாலை திட்டத்தை அவர்களிடம் திணிக்க மாட்டோம். எந்த ஒரு திட்டத்தையும் மக்கள் மீது மாநில அரசு திணிக்காது. நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை அமைக்கப்படும். நீதிமன்றத்தின் உத்தரவுக்கு ஏற்ப இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.
இந்த சாலையால் புதிய தொழிற்சாலைகள் வரும், இதன்மூலம் படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். சேலத்தில் ராணுவ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையை மத்திய அரசு அமைக்க உள்ளது. இதில் வேலைவாய்ப்பை பெற்று தர நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்ற மாநிலங்களை விட தமிழகம் உட்கட்டமைப்பில் முதன்மை மாநிலமாக உள்ளது. சாலைகள் தரமாக அமைக்கப்பட்டுள்ளது. மக்கள் கோரிக்கையை நிறைவேற்றும் அரசாக தமிழக அரசு இருக்கும் என்று உறுதி கூறுகிறேன்" என்றார்.
எட்டு வழிச்சாலை திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்த விதித்திருந்த சென்னை ஐகோர்ட்டின் தடையை நீக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருக்கும் நிலையில், முதல்வர் பழனிசாமி 'நில உரிமையாளர்களை சமாதானப்படுத்தி 8 வழிச்சாலை அமைக்கப்படும்' என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.