தமிழகத்தில் இன்று மட்டும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால், தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது
சென்னை தலைமைச் செயலகத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், உயர்மட்ட அதிகாரிகளுடன் இன்று (மார்ச் 30) முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.
அதன் பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, "உலகளவில் 199 நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியிருக்கிறது. இந்தியாவில் 27 பேர் இந்த வைரஸ் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் ஒருவர் மட்டும்தான் உயிரிழந்துள்ளார். இந்தியாவில் 1,139 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் குறித்த லைவ் அப்டேட்ஸ் காண இங்கே க்ளிக் செய்யவும்
தமிழகத்தில் ஏற்கெனவே 50 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், 17 பேருக்கு தமிழகத்தில் இந்த வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 67 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அரசு, தனியார் மருத்துவமனைகள் சேர்த்து 17 ஆயிரத்து 89 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தனியார், அரசு மருத்துவமனைகளில் 3,018 வென்டிலேட்டர்கள் உள்ளன. அரசு, தனியார் சேர்ந்து சோதனை செய்வதற்கான ஆய்வு வசதி 14 மையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், 3 சோதனை மையங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
2 லட்சத்து 9,234 பயணிகள் இதுவரை விமான நிலையங்களில் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். 3,470 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு நிறைவடைந்துள்ளது. 1,981 பேருக்கு ஆய்வகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 43 ஆயிரத்து 537 பேர் வீடுகளில் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். 1,641 பேர் இதுவரை கண்காணிப்பு மையங்களில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டனர்.
1,975 பேர் சந்தேகத்தின் பேரில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா உறுதியாகி பின்னர் சிகிச்சை பெற்று குணமாகி இதுவரை 5 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
மேலும், 25 லட்சம் என்-95 ரக முகக்கவசங்கள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. 1.50 கோடி சாதாரண முகக்கவசங்கள் வாங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைப் பணிகளுக்காக 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கொரோனா அறிகுறியுடன் இருப்பவர்களில், இன்னும் 121 பேரின் ஆய்வு முடிவுகள் வரவேண்டியுள்ளது. எல்லோருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடியாது. அறிகுறி இருப்பவர்களுக்கு மட்டுமே கொரோனா பரிசோதனை செய்யப்படும்.
சென்னையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான 9 இடங்கள்: வீட்டின் உள்ளேயும் மாஸ்க் அணிய மாநகராட்சி அறிவுரை
பிற மாநிலங்களை விட, தமிழக மக்களின் ஒத்துழைப்பு நன்றாகவே உள்ளது. அத்தியாவசியப் பொருட்கள் தடையின்றிக் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் 10 பேருக்கும், சென்னையில் 4 பேருக்கும், மதுரையில் 2 பேருக்கும், திருவாரூரில் ஒருவருக்கும் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்காததால், தற்போது இருப்பது ஒரே தடுப்பு மருந்து, மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்வதுதான். வீட்டு வாடகைதாரர்களின் கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்" என்று இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.