தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி முதலீடுகளை கொண்டு வருவதற்காக அமெரிக்கா, லண்டன், துபாய் என வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்த 13 நாள் சுற்றுப்பயணம் மூலமாக 8,830 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடு செய்வதற்கு 41 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து முதல்வரின் வெளிநாட்டு பயணம் பற்றி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வருகிறார். ஸ்டாலினின் இந்த பேச்சுக்கு தமிழக அமைச்சர் ஆர் பி உதயகுமார், "வெள்ளை அறிக்கை கேட்பவர்கள் முதல்வரின் வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை வெள்ளை மனதுடன் பார்க்க வேண்டும்"என பதில் கூறினார்.
இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி கோவையில் செய்தியாளர்களிடம் இன்று பேசுகையில், "வெளிநாடு பயணம் மூலம் ரூ.8,895 கோடி முதலீடு கிடைக்க உள்ளது. 41 நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. புதிய முதலீடுகள் மூலம் 35,520 பேருக்கு வேலை கிடைக்கும்.
பெரிய தொழில்கள் தொடங்க குறைந்தது 5 ஆண்டுகளாகும். தமிழகத்தில் 40 ஆண்டுகளாக எந்த முதல்வரும் வெளிநாடு பயணம் மேற்கொள்ளவில்லை. 29 தொழில்கள் தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. இன்னும் பல தொழில்கள் தொடங்க என்னுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசை பாராட்ட ஸ்டாலினுக்கு மனமில்லை. திமுக ஆட்சியின் போது எத்தனை தடுப்பணைகள் கட்டப்பட்டன. திமுக ஆட்சிக் காலத்தில் வெளிநாட்டு முதலீடுகள் குறித்து எத்தனை வெள்ளை அறிக்கை வெளியிட்டார்கள்?. திமுக ஆட்சிக் காலத்தில் தொழில் முதலீடு ரூ.26 ஆயிரம் கோடி தான். ஆனால், அதிமுக ஆட்சியில் ரூ.2 லட்சம் கோடிக்கும் மேல் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது.
ஸ்டாலின் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளார். குறுகிய எண்ணம் கொண்ட ஸ்டாலின் விமர்சனம் செய்யாமல் இருந்தாலே பாராட்டுக்குரியது தான். அனைத்து மாநில முதல்வர்களும் வெளிநாடு பயணம் செய்து முதலீடுகளை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக அரசு வளர்ச்சி திட்டங்களை கொண்டுவருவதை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. ஸ்டாலின் கூறுவது அனைத்தும் பொய்" எனத் தெரிவித்துள்ளார்.