எத்தனை ஆயிரம் கோடி நிதி கொடுத்தாலும் சரி தேசியக் கல்விக்கொள்கையை ஏற்றுக் கொண்டு கையெழுத்து போட மாட்டேன் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டம், வேப்பூரில் உள்ள திருப்பயர் என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (பிப் 22) உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், "ஆறாம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்னும் பெயரில் குலக்கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்த முயற்சி செய்கின்றனர். குலத் தொழில், ஜாதித் தொழில் என்று மனுநீதி சொல்லும் அநீதியை, படித்து முன்னேற நினைப்பவர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர்.
இவை அனைத்தையும் பார்த்து தான் தேசியக் கல்வி கொள்கையை ஏற்க மாட்டோம் என உறுதியாக சொல்கிறோம். இந்த திட்டத்தில் கையெழுத்து போட்டால் தான் ரூ. 2 ஆயிரம் கோடி கிடைக்கும். ரூ. 10 ஆயிரம் கோடி கிடைக்கும் என்று சொன்னால் கூட நாங்கள் கையெழுத்து போட மாட்டோம்.
ரூ. 2 ஆயிரம் கோடிக்காக இன்று நாங்கள் கையெழுத்து போட்டால் என்ன ஆகும் என்று கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுக்கு பின்னோக்கி நம் தமிழ் சமூதாயம் சென்று விடும். அந்த பாவத்தை நான் ஒரு போதும் செய்ய மாட்டேன்.
உங்கள் குழந்தைகளின் திறமை வளர வேண்டுமா? அல்லது மூன்றாவது மொழி திணிக்கப்பட்டு அவர்களின் கல்வி தடைபட வேண்டுமா? நாங்கள் எந்த மொழிக்கும் எதிரி அல்ல. இந்தி மொழியும் எங்களுக்கு எதிரி இல்லை. இந்தி பயில வேண்டும் என நினைப்பவர்களை தமிழ்நாடு ஒருபோதும் தடுத்தது இல்லை.
ஆனால், இந்தியை எங்கள் மேல் திணிக்க நினைக்காதீர்கள். தமிழர் என்றொரு இனம் உண்டு; தனியே அவருக்கொரு குணம் உண்டு என்பதை தமிழ்நாடு காண்பித்து விடும். எல்லா மாநிலங்களும் மும்மொழிக் கொள்கை மற்றும் தேசிய கல்விக் கொள்கையை ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் மறுப்பது ஏன் என மத்திய அமைச்சர் கேட்கிறார்.
எங்கள் உயிரை விட மேலாக தமிழை நாங்கள் மதிக்கிறோம். எங்கள் மொழியை அழிக்க எந்த ஆதிக்கத்தை கொண்டு வந்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்ள மாட்டோம். இந்தியாவின் குடியரசு துணைத் தலைவர் தனது கருத்தை சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் 'ஒரு நிலத்தை கைப்பற்றுவதற்கு அதன் கலாசாரத்தை பின்னுக்கு தள்ளி, அதன் மொழியை அழிப்பதே சிறந்த வழி' எனக் கூறியுள்ளார்.
அவர் பழைய வரலாற்றை கூறியிருந்தாலும், அதுவே தமிழ்நாட்டின் புதிய வரலாறாகவும், கொடிய வரலாறாகவும் மாறி விடக் கூடாது. அதற்காக தான் நாங்கள் போராடுகிறோம். இதற்காகவே 85 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட இயக்கம் போராடி வருகிறது. இந்தியாவில் ஏறத்தாழ 52 மொழிகள் அழிவின் விளிம்புக்கு சென்றுள்ளன.
இந்தி பெல்ட் எனப்படும் மாநிலங்களில் மட்டும் கிட்டத்தட்ட 25 மொழிகள் அழிந்துள்ளன. தாய்மொழியை இழந்து இந்தி ஆதிக்கத்திற்கு பலியான மாநிலங்கள் இப்போது தான் மெல்ல மெல்ல விழிப்படைந்து வருகின்றன. நிதியை கொடுக்கச் சொல்லி கேட்டால், தமிழ் மீது பிரதமருக்கு அக்கறை இருக்கிறது என மத்திய அமைச்சர் கூறுகிறார்.
அவர்களுடைய அக்கறை தமிழுக்கு என்ன செய்தது? சமஸ்கிருத மொழியின் வளர்ச்சிக்கு மத்திய அரசு ரூ. 1,488 கோடி நிதி ஒதுக்கியது. அந்த மொழியை இந்நாட்டில் பேசுபவர்கள் சில ஆயிரம் பேர் தான். 8 கோடி மக்கள் பேசும் நம் தமிழ் மொழி வளர்ச்சிக்கு வெறும் ரூ. 74 கோடி தான் நிதி ஒதுக்கப்பட்டது. இது தான் நீங்கள் தமிழை வளர்க்கும் லட்சணமா?" எனக் குறிப்பிட்டுள்ளார்.