/indian-express-tamil/media/media_files/2025/10/04/mk-stalin-s-2025-10-04-21-39-51.jpg)
திருச்சியில் உருவாகும் பெரியார் உலகத்துக்கு தி.மு.க பங்களிப்பு: ஸ்டாலின், 31 எம்.பி- கள் சேர்ந்து ரூ. 1.50 கோடி நிதி வழங்குவதாக அறிவிப்பு
செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகரில் திராவிடர் கழகம் சார்பில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார். திராவிடர் கழகத்தினருக்கு சல்யூட் தெரிவித்து தனது உரையைத் தொடங்கிய அவர், திராவிடர் கழகம் மற்றும் தி.மு.க.வின் உறவு, பெரியார் சிந்தனைகள், மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்துப் பேசினார்.
"கி.வீரமணி இளைஞர் போலப் பணியாற்றுகிறார்"
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "கலைஞர் மற்றும் பேராசிரியருக்குப் பிறகு என்னை வழிநடத்துபவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் தான். திராவிடர் கழகத்திற்கு எதிராகத் தொடங்கியது அல்ல திமுக; மாறாக, திராவிடர் கழகத்தின் நீட்சிதான் திமுக" என்று வலியுறுத்தினார். மேலும், 92 வயதிலும் இளைஞர் போல வீரமணி அவர்கள் ஊர் ஊராகச் சென்று பரப்புரை செய்கிறார். அவதூறுகளுக்கு பதில் தருகிறார். அவருடைய பணிச் சுமையை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்," என்று கோரிக்கை விடுத்தார்.
பெரியார் உலகத்துக்கு ரூ. 1.50 கோடி நிதியுதவி
பெரியாரின் சிந்தனைகளை அவர் வாழ்ந்த காலத்திலேயே நிறைவேற்றியது திமுக அரசுதான் என்று முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். திருச்சியில் அமையவிருக்கும் பெரியார் உலகத்துக்காக தனது ஒரு மாத ஊதியத்தை வழங்குவதாக முடிவெடுத்த நிலையில், தற்போது திமுக சார்பில் 31 எம்.பிக்களின் ஊதியத்தையும் சேர்த்து மொத்தம் ரூ. 1.50 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
"தமிழையும் தமிழர்களையும் சிலருக்குப் பிடிக்கவில்லை"
தம்மைப் பற்றிப் பரப்பப்படும் வதந்திகளுக்கு தான் என்றும் தனது செயல்களால் மட்டுமே பதிலடி கொடுப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். நம் இனத்திலிருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்குப் பிடிப்பதில்லை. தமிழையும் பிடிக்காது, தமிழர்களையும் பிடிக்காது; நாம் தலைநிமிர்வதும் சிலருக்குப் பிடிக்காது," என்று அவர் சாடினார்.
தமிழர்களைத் தற்காக்கும் தேர்தல்
"இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின்னால் இழுத்துச் செல்கிறார்கள். இதைத் தடுத்து நிறுத்துவதுதான் திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்," என்று முழக்கமிட்டார். மேலும், அடுத்த தேர்தல் என்பது தமிழர்களைத் தற்காக்கும் தேர்தல். தமிழ்நாட்டை ஒருபோதும் தலைகுனிய விடமாட்டோம் என்று உறுதியேற்க வேண்டும் என்றார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.