சிவகங்கையில் கள ஆய்வு மேற்கொண்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், மாவட்டத்தின் வளர்ச்சி பணிகளுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்தார்.
சிவகங்கை மாவட்டத்தில், இன்று (ஜன 22) இரண்டாவது நாளாக நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். குறிப்பாக, மன்னர் துரைசிங்கம் கலைக்கல்லூரியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்று, பயனாளிகளுக்கு உதவிகளை வழங்கினார்.
மேலும், நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து புதிய திட்டங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதன் தொடர்ச்சியாக நடைபெற்ற விழாவில் பேசிய ஸ்டாலின், "ரூ. 164 கோடி மதிப்பீட்டில் 33 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது, ரூ. 51 கோடியில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன.
ரூ. 89 கோடி மதிப்பீட்டில் சிவகங்கையில் ஒருங்கிணைந்த புதிய ஆட்சியர் அலுவலகம் அமைக்கப்படும். திருப்பத்தூரில் ரூ. 50 கோடியில் புறவழிச்சாலை அமைக்கப்படும். காரைக்குடி மாநகராட்சிக்கு புதிய அலுவலகம் கட்ட ரூ. 30 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தி.மு.க அளித்த 505 வாக்குறுதிகளில் 389 நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. தமிழகத்தை பற்றாக்குறை மாநிலமாக மாற்றியது முந்தைய அரசான அ.தி.மு.க தான். பதவிக்காக டெல்லி சென்றவர் தான் எடப்பாடி பழனிசாமி.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதால் தி.மு.க மீது எடப்பாடி பழனிசாமி வயிற்று எரிச்சலில் உள்ளார். மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசின் நிதியில் இருந்து செயல்படுத்தி வருகிறோம்" எனத் தெரிவித்தார்.