/tamil-ie/media/media_files/uploads/2023/06/New-Project70.jpg)
CM Stalin
சேலம் மாவட்டம் ஐந்து ரோடு பகுதியில் தி.மு.க செயல் வீரர்கள் கூட்டம் நேற்று (ஜுன் 10) நடைபெற்றது. இதில் முதல்வர், தி.மு.க தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "வாழ்வில் மறக்க முடியாத மாவட்டம் சேலம் மாவட்டம் தான். இந்த சேலம் மண்ணில் தான் திராவிட இயக்கம் உருவானது. இந்த ஆண்டு முழுவதும் கலைஞரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. ஒவ்வொரு ஊர்களிலும் திமுக கம்பங்களை புதுப்பிக்க வேண்டும். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்ய வேண்டும்.
வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெல்வதற்கு அச்சாணியாக சேலம் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் தான் வர உள்ளது என அலட்சியம் கூடாது. இப்போது இருந்தே பணிகளை தொடங்க வேண்டும்.
'ஒரு புறம் கட்சி வளர்ச்சியும்; மறுபுறம் மாநில வளர்ச்சியையும்’ இரு கண்களாக கொண்டே செயலாற்றி வருகிறேன். இனி எந்த காலத்திலும் திமுக ஆட்சியை, எந்த சக்தியாளும் வீழ்த்த முடியாத அளவுக்கு கழகத்தை கட்டமைத்து எழுப்பியுள்ளேன். நாம் நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டிய தருணம் வந்துவிட்டது. கர்நாடக சட்டமன்றத் தோல்வியை அடுத்து நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் மத்திய அரசு திட்டமிடுவார்கள். எதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும்.
கடந்த 9 ஆண்டு கால பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்துக்கு செய்த சிறப்பு திட்டங்களை சென்னை வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா பட்டியலிட வேண்டும் எனக் தமிழக மக்களின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்திற்கு செய்த 9 வருட சாதனைகளை எடுத்துக் கூற அமித்ஷா தயாராக உள்ளாரா?
காங்கிரஸ்- தி.மு.க கூட்டணியில் மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்த போது மெட்ரோ ரயில் திட்டம் உள்பட 619 திட்டங்கள் கொண்டு வந்து, 80 சதவீத பணி நிறைவேற்றப்பட்டது.
இந்திய அளவிலான மாநிலங்களில் தமிழகத்துக்கு 11 சதவீதம் நிதியை காங்கிரஸ் ஆட்சியில் பெற்றுள்ளோம். ஆனால், பாஜக மதுரையில் இன்னும் எய்ம்ஸ் மருத்துவமனை திட்டத்தை நிறைவேற்றவில்லை என்பதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் அளிக்க வேண்டும். பாஜக ஆட்சி சாதனையாக தமிழகத்தில் ஹிந்தி, சமஸ்கிருதம் திணிப்பு, குடியேறும் சட்டத்தால் சிறுபான்மையினரை ஒடுக்கியும், ‘நீட்’ தேர்வு கொடுமையுமே மிகுந்துள்ளது. பா.ஜ.க வளர்ச்சி நாளுக்கு நாள் சரிந்து கொண்டு இருக்கிறது" என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.