தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் இன்று (நவ.18) நடைபெறுகிறது. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள 10 சட்ட மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், அவற்றை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் இன்று நடைபெற்றது.
முதல்வர் ஸ்டாலின் அரசின் தனித் தீர்மானத்தை முன்மொழிந்த நிலையில், சட்டப்பேரவை உறுப்பினர்களின் கருத்திற்குப் பின் ஸ்டாலின் கொண்டு வந்த தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. சட்டமுன்வடிவுகள் பிரிவு வாரியாக மீண்டும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.
முன்னதாக, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்ட மசோதாக்களை மீண்டும் சட்டப் பேரவையில் மறுஆய்வு செய்து நிறைவேற்றிட கோரி தனித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசுகையில், “எனது உடல்நலனைவிட மாநில மக்களின் நலனே முக்கியம். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை முடக்கும் செயல்கள் இங்கு நடக்கின்றன. மத்திய அரசின் இந்த போக்கு நீடித்தால் ஜனநாயகம் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்படும்.
பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலமாக குடைச்சல் கொடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆளுநர் என்ற உயர்ந்த பதவியின் மூலம் அரசியல் செய்ய நினைக்கின்றனர்.
மாநில அரசின் திட்டங்களுக்கு எப்படி முட்டுக்கட்டை போடலாம் என நாள்தோறும் யோசித்து வரும் ஆளுநர், சட்டப் பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் இருப்பது மக்கள் விரோத செயல்.
ஆளுநர் நாள்தோறும் யாரையாவது அழைத்து வகுப்பெடுக்கிறார் அல்லது விழாக்களுக்கு சென்று விதண்டாவாதம் பேசுகிறார். அரசியல் சட்டத்துக்கு எதிராக அரசுடன் மோதல் போக்கை கடைபிடித்து வரும் ஆளுநருக்கு அறிவுரை வழங்க வேண்டுமென குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதி இருந்தோம்.
தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளின் அடிப்படையில் மசோதாக்களை திருப்பி அனுப்பும் ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டையும், தமிழ்நாட்டு மக்களையும் அவமதிக்கிறார்.
ஆளுநர் பதவி என்பதே அகற்றப்பட வேண்டிய பதவி என்றாலும் இருக்கும்வரை மக்களாட்சி தத்துவத்திற்கு அடங்கியிருக்க வேண்டும். மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டியது ஆளுநரின் கடமை. மசோதாக்கள் மீது ஏதேனும் சந்தேகம் இருந்தால் அரசிடம் ஆளுநர் விளக்கம் கோரலாம்; மசோதா தொடர்பாக ஆளுநர் கோரிய கேள்விகளுக்கு விளக்கம் அளிக்காமல் இருந்ததில்லை” என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.