/indian-express-tamil/media/media_files/rgRMRqT5Cx4TKs4bthNG.jpg)
2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாட்டிற்கான திட்டங்கள், அறிவிப்புகள் எதுவும் இல்லை எனவும் தமிழ்நாட்டின் பெயரே பட்ஜெட்டில் இல்லை என முதல்வர் ஸ்டாலின் மற்றும் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனம் செய்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று (ஜூலை 27) பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிலையில், மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்துள்ளது என்றும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்தும் ஸ்டாலின் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "மத்திய பா.ஜ.க அரசின் மாற்றந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக திராவிட மாடல் அரசு பல்வேறு முற்போக்கு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்பதை மக்கள் அறிவர். நாள்தோறும் திட்டங்கள், மக்கள் மனந்தோறும் மகிழ்ச்சி என்பதே திராவிட மாடல் அரசின் எண்ணம். திராவிட மாடல் அரசின் திட்டங்களுக்கு மத்திய பாஜக அரசு இடையூறை ஏற்படுத்தி வருகிறது.
ஓர் அரசு என்பது வாக்களிக்க மறந்தவர்களுக்காகவும் செயல்படும் அரசாக இருக்கவேண்டும். வாக்களிக்காத மக்களுக்காகவும் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது. தங்களுக்கு வாக்களிக்காத மக்களுக்காகவும் மோடி அரசுக்கு முந்தைய அரசுகள் செயல்பட்டன. பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, அரசியல் நோக்கத்தோடு அரசாங்கத்தை நடத்துகிறது.
தலைநகரில் @NITIAayog கூட்டத்தில் பங்கெடுத்திருக்க வேண்டிய நாளில், ஒன்றிய பா.ஜ.க. அரசின் வஞ்சனையால், நீதி கேட்டு மக்கள் மன்றத்தில்…#UnfairBudget4TN pic.twitter.com/L2rqtORNvD
— M.K.Stalin (@mkstalin) July 27, 2024
அரசியல் நோக்கத்தோடு மோடி அரசு செயல்படுகிறது என்பதற்கான அடையாளம்தான் நிதிநிலை அறிக்கை. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மாநில மக்களுக்கு எதிராக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 3-வது முறையாக ஆட்சி அமைத்துள்ள பாஜகவுக்கு இந்திய மக்கள் பெரும்பான்மை அளிக்கவில்லை. ஒரு சில மாநிலக் கட்சிகளின் ஆதரவு இல்லை என்றால் பாஜகவினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது.
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை ஒட்டுமொத்த இந்தியாவுக்கான நிதிநிலை அறிக்கையாக இருந்திருக்கவேண்டும். இந்தியா கூட்டணியை பழிவாங்கும் வகையில் ஒன்றிய அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. தங்களின் சறுக்கலுக்கு என்ன காரணம் என உணர்ந்து பாஜக திருந்தியிருக்கும் என்று நினைத்தேன், ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. மோடி தலைமையிலான பாஜக அரசு தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது.
மோடி தலைமையிலான ஆட்சியில் தமிழ்நாட்டுக்காக அறிவிக்கப்பட்ட ஒரே திட்டம் எய்ம்ஸ் மருத்துவமனை. இது தமிழ்நாட்டை பழிவாங்கும் பட்ஜெட் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்களையே பழிவாங்கும் பட்ஜெட். மோடி அறிவித்த மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை நிலை குறித்து மக்கள் அறிவார்கள்.
சுயநலத்துக்காக நாற்காலியைக் காப்பாற்றிக் கொள்ள போட்டுக் கொண்ட பட்ஜெட் இது. பதவி நாற்காலிக்கு, கால்களாக இருக்கும் மாநிலங்களுக்கு ₹10,000 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை புறக்கணித்த மக்களை பழி வாங்கும் பட்ஜெட் தான் இது" எனக் கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.