தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை (மார்ச் 1) தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி தி.மு.க சார்பில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் உள்பட பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தி.மு.க அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களைச் சந்திக்கிறார். தனது 70-வது பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் காலை 7 மணிக்கு மெரினாவில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்துகிறார்.
Advertisment
பின்னர், வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். இதைத்தொடர்ந்து அங்கிருந்து அண்ணா அறிவாலயம் செல்லும் ஸ்டாலின் காலை 8.30 மணியளவில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திக்கிறார். இதையடுத்து, மாலை 5 மணியளவில் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட விழாவில் பங்கேற்று உரையாற்றுகிறார்.ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.
ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில், திமுகவின் தகவல் தொழில்நுட்ப பிரிவு புதுமையான ஏற்பாடுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. கட்சி தொண்டர்கள், பொதுமக்கள், உள்ளிட்டோர், 07127 191333 என்ற தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தங்களின் பிறந்த நாள் வாழ்த்துக்களை 30 விநாடி பதிவு செய்யலாம் என்று கூறியுள்ளது. மேலும், selfiewithCM.com என்ற இணையதளத்தில் QR குறியீடு இணைக்கப்பட்டுள்ளது, முதலமைச்சரின் பல்வேறு புகைப்படங்களோடு, மக்கள் தங்கள் விருப்பப்படி மெய்நிகர் முறையில் அதில் செல்ஃபி எடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/