தமிழக முதல்வர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தொலைபேசியில் தொடர்புகொண்ட பிரதமர் மோடி நலம் விசாரித்தார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தற்போது அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொற்று பாதிப்பில் இருந்து தங்களை காத்து்ககொள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவல் குறித்து அதிகாரிகள் பல இடங்களில் கட்டுப்பாடுகளை ஆய்வு செய்து வருகினறனர்.
இதனிடையே கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்ட முதல்வர் ஸ்டாலின் தனது வீட்டிலேயே தனிமைபடுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சி.டி ஸ்கேன் எடுப்பதற்காக காவேரி மருத்துவமனை சென்ற முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தற்போது மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்கானிப்பில் இருக்கும் முதல்வர் விரைவில் வீடு திரும்புவார் என்றும், அவரது உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் மருத்துவமனை சார்பில் கூறப்பட்டுள்ளளது. இதனிடையே முதல்வரின் உடல்நலம் குறித்து பிரதமர் மோடி தொலைபேசியில் நலம் விசாரித்துள்ளார். அப்போது தான் நன்கு குணமடைந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வரும் ஜூலை 28-ந் தேதி சென்னை மகாபலிபுரத்தில் தொடங்க உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவிற்கு வருமாறு முதல்வர் பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளார். நேரில் வந்து அழைப்பதாக இருந்த நிலையில், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தொலைபேசி மூலம் அழைப்பதாகவும் கூறியுள்ளார்.
தன்னால் வர முடியாத காரணத்தால், எம்பி டிஆர் பாலு, கனிமொழி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர், மற்றும் தலைமை செயலாளர் ஆகியோரை அனுப்பி வைப்பதாகவும், தாங்கள் அவசியம் இந்த நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“