நீட் தேர்வு தொடர்பாக எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் சவால் விடுத்துள்ளார்.
உதகையில் புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஏப்ரல் 6) திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில் அவர் உரையாற்றினார்.
அப்போது, "தமிழ்நாடு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை மத்திய அரசு நிராகரித்தது. அதனை நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் நான் நினைவு கூர்ந்தேன். இது குறித்து அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க வரும் 9-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்று நான் அறிவித்திருக்கிறேன்.
ஆனால், நீட் தீர்வு காரணமாக மாணவி உயிரிழந்த சம்பவத்திற்கு தி.மு.க-வை குறை கூறி எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிடுகிறார். தி.மு.க ஆட்சியில் இருக்கும் போது தமிழ்நாட்டில் நீட் தேர்வு வர முடிந்ததா?
கருணாநிதி முதலமைச்சராக பதவி வகித்த வரை தமிழ்நாட்டில் நீர் தேர்வு கிடையாது. ஜெயலலிதா இருந்த வரை கூட தமிழ்நாட்டிற்குள் நீட் தேர்வை அனுமதிக்கவில்லை. அவரது மறைவிற்கு பின்னர் தான், ஓ. பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க-வுடன் சேர்ந்து நீட் தேர்வை அனுமதித்தனர்.
பா.ஜ.க-வுடன் கூட்டணி குறித்து மாற்றி, மாற்றி பேசும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நான் சவால் விடுகிறேன். தமிழ்நாட்டு மாணவர்கள் மீது உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.க கூட்டணிக்கு செல்வதற்கு முன்பாக, நீட் விலக்கு தந்தால் தான் கூட்டணி என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா?" அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.