நெல்லையில் ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகிர் உசைன் கொலை வழக்கு தொடர்பாக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை அ.தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க ஆகிய கட்சிகள் கொண்டு வந்தன.
மேலும், இந்த விவகாரம் குறித்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, ஜாகிர் உசைன் வழிமறித்து கொல்லப்பட்டுள்ளார் என்று கூறினார். மேலும், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக மூன்று மாதங்களுக்கு முன்பு ஜாகிர் உசைன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் முறையாக விசாரணை நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
ஜாகிர் உசைன் புகாரளித்து அதன்பேரில் உரிய நடவடிக்கை எடுக்காத காவல் அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதேபோல், தமிழ்நாட்டில் அண்மை காலமாக காவல்துறையினரின் செயல்பாடுகள் மிக மோசமாக இருக்கிறது என்ற குற்றச்சாட்டையும் எடப்பாடி பழனிசாமி முன்வைத்தார்.
ஜாகிர் உசைன் கொலை வழக்கில் புகாரளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார். இதேபோல், மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா பேசும் போது, நெல்லை காவல் ஆணையர் இந்த கொலை வழக்கு தொடர்பாக தவறான தகவலை பரப்பியதாக குற்றம்சாட்டினார். எனவே, காவல் ஆணையர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற வாதத்தை அவர் முன்வைத்தார்.
இதனைத் தொடர்ந்து, கவன ஈர்ப்பு தீர்மானம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது பேசிய அவர், "ஜாகிர் உசைன் மனைவி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்படுகிறது. இந்த வழக்கு தொடர்பாக இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஜாகிர் உசைன் முகநூல் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வீடியோ குற்றச்சாட்டு குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
நிலப்பிரச்சினை தொடர்பாக ஜாகிர் உசைனுக்கும், கிருஷ்ண மூர்த்திக்கும் முன்விரோதம் இருந்தது. சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது" எனத் தெரிவித்தார்.