சென்னையில் நாளை (மாரச் 22) நடைபெறவுள்ள தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்த வீடியோ ஒன்றை அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "தொகுதி மறுசீரமைப்பு தான் இப்போது பேசுபொருளாக இருக்கிறது. 2026-ஆம் ஆண்டில் தொகுதி மறுசீரமைப்பு கண்டிப்பாக நடைபெறும். அப்போது, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற்றால், நம் மாநிலத்தின் எம்.பி-க்கள் பிரதிநிதித்துவம் பாதிக்கப்படும். இதை உணர்த்துவதற்காக தான் தி.மு.க முதலில் குரல் எழுப்பியது.
இது எம்.பி-க்கள் எண்ணிக்கை சார்ந்த பிரச்சனை மட்டும் கிடையாது. நம் மாநிலத்தின் உரிமை சார்ந்த பிரச்சனை. அதனால் தான் தமிழ்நாட்டின் அனைத்து கட்சிகளையும் அழைத்து கூட்டம் நடத்தப்பட்டது. பா.ஜ.க தவிர மற்ற அனைத்து கட்சியினரும் ஓரணியில் நின்று, நியாயமான தொகுதி மறுசீரமைப்பு வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்றினோம்.
தொகுதி மறுசீரமைப்பால் பாதிக்கப்படவுள்ள மற்ற மாநிலங்களையும் ஒருங்கிணைத்து போராட வேண்டும் என்று முடிவு செய்தோம். அதன்பேரில், ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா, ஒடிசா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 7 மாநில முதலமைச்சர்களுக்கும், அந்த மாநிலத்தின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இருக்கும் அனைத்து கட்சியினருக்கும் நான் கடிதம் எழுதினேன்.
அக்கடிதத்தை, ஒரு அமைச்சர் மற்றும் ஒரு எம்.பி அடங்கிய குழுவினர் நேரில் சென்று கொடுத்து விளக்கம் அளித்தனர். அனைத்து மாநில முதலமைச்சர்களுடனும் நான் தொலைபேசியில் பேசினேன். இதைத் தொடர்ந்து, சிலர் நேரடியாக வருவதாகவும், சிலர் தங்களின் பிரதிநிதிகளை அனுப்புவதாகவும் கூறினர். இந்த முதற்கட்ட ஆலோசனை கூட்டம் நாளை (மார்ச் 22) சென்னையில் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டம் எதற்காக நடத்தப்பட வேண்டும் என்று சிலர் கேட்கின்றனர். தொகுதி மறுசீரமைப்பால் தமிழ்நாடு மற்றும் சில மாநிலங்கள் பாதிக்கப்பட்டால், இந்தியாவின் கூட்டாட்சிக்கான பொருளே இருக்காது. ஜனநாயகத்திற்கான மதிப்பு இல்லாமல் போய்விடும். நாடாளுமன்றத்தில் நமது குரல்கள் நசுக்கப்படும். நமது குரலை நிலைநாட்ட முடியாது. இது, குறிப்பிட்ட மாநிலங்களை அவமதிக்கும் செயல்.
எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு நாட்டின் வளர்ச்சிக்கு பங்களித்த மாநிலங்களுக்கு, மத்திய அரசு தண்டனை வழங்கக் கூடாது. இதற்காக தான் கூட்டம் நடத்தப்படவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஒரு முடிவு எடுக்கப்படும். அதனடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கையை மேற்கொள்வோம். நமது நியாயமான கோரிக்கைகள் நிச்சயம் வெற்றி அடையும். நமது முன்னெடுப்பு இந்தியாவை காக்கும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.