/indian-express-tamil/media/media_files/2025/03/04/LON4nwIuaKDE7TTZAmzp.jpg)
தமிழ்நாட்டில் தி.மு.க-வினர் உள்ளிட்ட ஏராளமானோர் நடத்தி வரும் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் இந்தி மொழி பயிற்றுவிக்கப்படுவதற்கான காரணத்தை, முதன்முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் விளக்கம் அளித்துள்ளார். அதில், "என் பிறந்தநாளில் பா.ஜ.க. நிர்வாகியான அன்புச் சகோதரி டாக்டர் தமிழிசை சௌந்திரராஜன் அவர்கள் எனக்கு 'மும்மொழி'யில் வாழ்த்து தெரிவித்து தன் அன்பையும், தன் இயக்கத்திற்குரிய 'பண்பையும்' காட்டியிருக்கிறார்.
தமிழிசையின் மும்மொழி வாழ்த்தில் 'இந்தி' இடம்பெறவில்லை. அதுதான் தமிழ்நாட்டில் நிலவுகிற உணர்வின் வெளிப்பாடு.
தமிழ் - ஆங்கிலம் இரண்டு மொழிகளில் அமைந்த வாழ்த்துக்குப் பிறகு, தெலுங்கு மொழியில் வாழ்த்தியிருக்கிறார்.
தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட மாநிலத்தில் பணியாற்றியதால், பழக்கத்தின் மூலமாக அறிந்து கொண்டிருக்கிறார்.
இதிலிருந்தே, மூன்றாவதாக ஒரு மொழியை வலிந்து படிக்க வேண்டியதில்லை என்பதையும், தேவைப்படுகிறவர்கள் அதனைப் புரிந்து கொண்டு பயன்படுத்த முடியும் என்கிற திராவிட இயக்கத்தின் கொள்கை வழியிலான தமிழ்நாட்டின் உணர்வையும் எனக்கான பிறந்தநாள் வாழ்த்துப் பதிவின் மூலம் உறுதிப்படுத்தியுள்ள சகோதரி தமிழிசைக்கு என் நன்றி.
Google Translate, Chat GPT போன்ற தொழில்நுட்பங்கள் மொழிச் சிக்கல்களை மனிதர்கள் எளிதாகக் கடப்பதற்கு உதவுகின்றன.
ஒவ்வொரு மொழிக்கும் தேவையான தொழில்நுட்பத்தைக் கற்றுக்கொள்வதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு மிகுந்த பயனளிக்கும். அதற்குப் பதிலாக, ஒவ்வொரு மொழியையும் மாணவர்களிடம் திணிக்க முயற்சிப்பது அவர்களுக்குச் சுமையாகவே அமையும்.
உருது மொழியும், அண்டை மாநிலங்களில் பேசப்படும் தெலுங்கு, கன்னட மொழிகளும் நம்முடைய கல்விக் கொள்கையின்படி இங்குள்ள சிறுபான்மை மொழிப் பள்ளிகளில் கற்றுத் தரப்படுகின்றன.
பா.ஜ.க.வின் நோக்கமே தமிழ்நாட்டில் ஆதிக்க இந்தியையும் சமஸ்கிருதத்தையும் கட்டாயமாகத் திணிக்க வேண்டும் என்பதுதான்.
தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் இந்தி கற்றுத் தரப்படுகிறது என்றால் அதற்குக் காரணம் ஒன்றிய அரசின் கல்விக்கொள்கைதானே தவிர, தி.மு.க.வினரோ வேறு எந்தக் கட்சியினரோ தனிப்பட்ட முறையில் காரணமாக மாட்டார்கள்.
A century has passed since the Dakshin Bharat Hindi Prachar Sabha was set up to make South Indians learn Hindi.
— M.K.Stalin (@mkstalin) March 4, 2025
How many Uttar Bharat Tamil Prachar Sabhas have been established in North India in all these years?
Truth is, we never demanded that North Indians must learn Tamil or… pic.twitter.com/mzBbSja9Op
அரசியல் நோக்கத்துடன் பேசும் பா.ஜ.க.நிர்வாகிகள், 'இந்தி படிக்கும் வாய்ப்பு, ஏழை மாணவர்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை?' என்று ஏதோ தமிழ்நாட்டு ஏழை மாணவர்கள் மீது அக்கறை உள்ளது போல வேடம் போடுகிறார்கள்.
மாணவர்களின் மீது மொழித் திணிப்பு எனும் சுமையை ஏற்றாமல், திறன் மேம்பாடு என்கிற வாய்ப்பை வழங்குவதுதான் திராவிட மாடல் அரசின் கல்வித் திட்டம்.
தென்னிந்தியர்கள் இந்தியைக் கற்க தட்சிண பாரத இந்தி பிரசார சபா நிறுவப்பட்டதுபோல, வடஇந்தியாவில் தென்னிந்திய மொழி ஒன்றைக் கற்றுக்கொள்ள உத்தர பாரத தமிழ்ப் பிரசார சபாவையோ, திராவிட பாஷா சபாவையோ நிறுவ முடிந்ததா?
தமிழ்நாட்டில் தற்போது ஓடும் இரயில்களுக்குக் கூட இந்தி - சமஸ்கிருதப் பெயர்களை வைப்பவர்கள் ஒன்றிய பா.ஜ.க ஆட்சியாளர்கள். தமிழையும் பிற மொழிகளையும் அழிப்பதுதான் அவர்களின் இரகசியத் திட்டம்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.