தமிழ்நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சி அமைத்த பின்னர் இதுவரை புதிதாக உருவாக்கப்பட்ட காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்கள் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (மார்ச் 26) நடைபெற்ற சட்டப்பேரவை அமர்வில் தமிழ்நாட்டில் காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களின் அதிகரிப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார்.
அவர் பேசுகையில், "காவல்துறை தொடர்பான விளக்கத்தை நான் இன்று கூற வேண்டி இருக்கிறது. சட்டப்பேரவையில் இருக்கும் பலரும் காவல் நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களை அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர். எனவே, இது குறித்த புள்ளி விவரங்களை நான் கூற வேண்டும்.
தி.மு.க பொறுப்பேற்ற பின்னர் 2021-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை 72 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. 23 தீயணைப்பு மற்றும் மீட்பு பணி நிலையங்கள் திறக்கப்பட்டு தற்போது செயல்பாட்டில் உள்ளன. மாநிலத்தின் நிதிநிலைக்கு ஏற்ப மேலும் சில மாவட்டங்களில் தீயணைப்பு மற்றும் காவல் நிலையங்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
இது தவிர மேலும் மூன்று தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்பட உள்ளன. புதுக்கோட்டையில், சிதிலமடைந்த காவல் நிலையக் கட்டடத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், காவல்துறை மானியக் கோரிக்கையில் மாமன்ற உறுப்பினர்கள் அனைவரும் திருப்தி அடையும் வகையில் அறிவிப்புகள் வெளியாகும்" எனத் தெரிவித்தார்.