ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தில் இருந்து பெறப்பட்ட பழமையான கையெழுத்துப் பிரதிகளை, அவற்றைப் பாதுகாக்கும் நோக்கில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலர்களிடம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 10, 2025) வழங்கினார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் அறங்காவலர் ஆர்.பாலகிருஷ்ணன், அறங்காவலர் மற்றும் இயக்குநர் ஜி.சுந்தர், மற்றும் இயக்குநர் (செயல்பாடுகள்) பிரகாஷ் ஆகியோர் முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து ஓலைச் சுவடிகளைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் ந.முருகானந்தம் உடனிருந்தார்.
சமீபத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனிக்கு சென்றிருந்தபோது, கோலன் பல்கலைக்கழக பிரதிநிதிகள் இந்த ஓலைச்சுவடிகளை அவரிடம் ஒப்படைத்தனர். கடந்த ஜூலை 2021-ல், தமிழக அரசு அந்த பல்கலைக்கழகத்திற்கு ரூ.1.25 கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “ஜெர்மனியின் கொலோன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளைப் பெற்று வந்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அவற்றைப் பாதுகாத்திட ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்திடம் வழங்கினார்கள்.
ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தின் இயக்குநர் சுந்தர் கணேசன் ஓலைச்சுவடிகளைப் பெற்றுக்கொள்ள நூலகத்தின் அறங்காவலரும் சிந்துவெளி ஆய்வு மையத்தின் மதிப்புறு ஆலோசகருமான ஆர். பாலகிருஷ்ணன், நூலகத்தின் திட்டப்பணி இயக்குநர் இரா. பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தனர்.” என்று குறிப்பிட்டப்பட்டுள்ளது.