முதலமைச்சருக்கான மிகவும் விருப்பமான தேர்வாக மு.க ஸ்டாலின் திகழ்வதாக, சி-வோட்டர் கருத்துக் கணிப்பில் 27 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருத்துக் கணிப்பில் 18 சதவீத வாக்குகளுடன் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி 10 சதவீத வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை 9 சதவீத வாக்குகளுடன் நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.
இந்த கருத்து கணிப்பு முடிவின் படி, மு.க. ஸ்டாலினின் தலைமைத்துவத்திற்கு அதிக ஆதரவு இருப்பது தெரிய வருகிறது. இதன் மூலம் மற்றவர்களை விட கணிசமான அளவு வாக்குகள் பெற்று ஸ்டாலின் முன்னிலையில் இருக்கிறார். எனினும், இதுவரை ஒரு தேர்தலில் கூட போட்டியிடவில்லை என்றாலும் அரசியலில் ஒரு நடிகரின் எழுச்சியைக் காட்டும் விதமாக அதற்கு அடுத்த இடத்தில் விஜய் இருக்கிறார்.
தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளில் மக்கள் திருப்தி அடைந்துள்ளதாகவும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளில் 15 சதவீதம் பேர் மிகவும் திருப்தி அடைந்துள்ளதாக கருத்துக் கணிப்புகளில் தெரிவித்துள்ளனர். இதேபோல், 36 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இது தவிர, 25 சதவீதம் பேர் தாங்கள் திருப்தி அடையவில்லை என்றும், 24 சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரு முதலமைச்சராக மு.க ஸ்டாலினின் செயல்பாடுகளில் 22 சதவீதம் பேர் மிகவும் திருப்தி அடைந்துள்ளனர் என்றும், 33 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளனர் என்றும், 22 சதவீதம் பேர் தாங்கள் திருப்தி அடையவில்லை என்றும், 23 சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை என்றும் கருத்துக் கணிப்பில் கூறியுள்ளனர். ஸ்டாலின் மிகவும் விருப்பமான தலைவராக இருப்பதாக சி-வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன.
எதிர்க்கட்சி தலைவரான எடப்பாடி பழனிசாமியின் செயல்பாடுகளும் இந்த கருத்துக் கணிப்பில் பிரதிபலிக்கிறது. அவரது நடவடிக்கைகளில் 8 சதவீதம் பேர் மட்டுமே மிகவும் திருப்தி அடைந்துள்ளதாகவும், 27 சதவீதம் பேர் ஓரளவு திருப்தி அடைந்துள்ளதாகவும், 32 சதவீதம் பேர் தாங்கள் திருப்தி அடையவில்லை என்றும், 33 சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த வாக்குகள் எதன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன என்று பொதுமக்களிடம் கேட்ட போது, பெண்களின் பாதுகாப்பை முன்னிறுத்தி 15 சதவீதம் பேரும், விலைவாசி உயர்வின் காரணமாக 12 சதவீதம் பேரும், மதுபானம் மற்றும் போதைப் பொருள்கள் காரணமாக 10 சதவீதம் பேரும், வேலைவாய்ப்பின்மையால் 8 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளதாக கூறினர்.
சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளைக் குறித்தும் இந்த கருத்துக் கணிப்பில் கேள்விகள் எழுப்பப்பட்டன. இதில், 16 சதவீதம் பேர் தங்கள் சட்டமன்ற உறுப்பினர்களின் செயல்பாடுகளில் மிகவும் திருப்தியாக இருப்பதாகவும், 32 சதவீதம் பேர் ஓரளவு திருப்தியாக இருப்பதாகவும், 25 சதவீதம் பேர் அதிருப்தியாக இருப்பதாகவும், 27 சதவீதம் பேர் முடிவு செய்யவில்லை என்றும் கூறியுள்ளனர்.
தமிழ்நாடு அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் தலைவராக ஸ்டாலின் இருக்கும் அதே வேளையில், ஆட்சியின் மீது மக்களுக்கு இருக்கும் சில பிரச்சனைகளால் எதிர்பாராத வருகையின் மூலம் நடிகர் விஜய் முக்கிய இடத்தை பிடித்து போட்டியாளராக உருவெடுத்துள்ளார். எனவே, இந்தக் காரணிகள் அனைத்தும் 2026-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் வெளிப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.