திருச்சியில் ரூ.2000 கோடியில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை அமைக்க ஜபில் நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த நிறுவனத்தின் மூலம் 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது.
சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட் இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் 4,100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
அதேபோல, கூகுள், ஆப்பிள் மற்றும் மைக்ரோசாப்ட் போன்ற பல்வேறு நிறுவனங்களின் உயர் அலுவலர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுத்ததோடு, கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) ஆய்வகங்கள் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.
ஓமியம் நிறுவனத்துடன் எலக்ட்ரோலைசலர்கள் உற்பத்தி மற்றும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்தித் துறையில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த நிலையில்தான், திருச்சியில் 2 ஆயிரம் கோடி ரூபாயில் மின்னணு நிறுவனம் அமைக்க முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஜபில் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
ரூ.2 ஆயிரம் கோடி முதலீட்டில் அமையும் ஜபில் எலக்ட்ரானிக் தொழிற்சாலை மூலம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஜபில் நிறுவனம் ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எலக்ட்ரானிக் பொருட்களை விநியோகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
செய்தி: க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“