/indian-express-tamil/media/media_files/2025/05/09/4c2nrJngHLQWcsp14N8m.jpg)
திருச்சி பஞ்சப்பூரில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் தொடங்கி வைத்தார்.
இரண்டு நாள் கள ஆய்விற்காக திருச்சி வந்த முதல்வர் ஸ்டாலின், டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் இருந்து பஞ்சப்பூர் வரை சாலை மார்க்கமாக வருகை தந்தார். வழிநெடுகிலும் அவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
பஞ்சப்பூரில் தந்தை பெரியார், அண்ணா சிலைகளை திறந்து வைத்த ஸ்டாலின், பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையத்தையும் திறந்து வைத்தார். தொடர்ந்து, ரூ. 408.36 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை திறந்து வைத்தார். பேருந்து நிலையத்தை சுற்றிப் பார்த்து, பொதுமக்களுக்காக செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார்.
பேருந்து நிலையத்தின் முதல் தளத்தில் நகர பேருந்துகளின் இயக்கத்தை தொடங்கி வைத்தார். இரண்டு தளங்களை கொண்ட இந்த பேருந்து நிலையத்தில், தரை தளத்தில் வெளியூர் பேருந்துகளும், முதல் தளத்தில் நகர பேருந்துகளும் இயக்கப்படும். தரை தளம் முழுவதும் ஏ.சி வசதி கொண்டது. ஒரே நேரத்தில் 401 பேருந்துகள் நிறுத்தும் வசதி, டிஜிட்டல் வழிகாட்டி பலகைகள், உணவகங்கள், கடைகள், ஆண்கள், பெண்கள், திருநங்கைகளுக்கு என 173 கழிப்பறைகள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள் உள்ளன. அண்டர் கிரவுண்டில் 1544 இருசக்கர வாகனங்கள், தரை தளத்தில் 216 கார்கள், 391 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் வசதியும் உள்ளன.
பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின்னர், அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், ரூ. 463.30 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 276.95 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.830.35 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ், எஸ்.எஸ். சிவசங்கர், எம்.பிக்கள் திருச்சி சிவா, அருண் நேரு, துரை வைகோ மற்றும் 50,000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விழா மேடையில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "இது பஞ்சப்பூர் அல்ல, எல்லா ஊரையும் மிஞ்சப்போகிற மிஞ்சப்பூர் என்றே தோன்றுகிறது. திருச்சியில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய பேருந்து நிலையத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்த்து பார்த்து தனது மாவட்டத்துக்கு என ஸ்பெஷலாக உருவாக்கியுள்ளார். விமான நிலையத்துக்கு இணையான வசதிகளுடன் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. மின் தூக்கி, நகரும் படிகட்டு, ஏசி வசதி ஆகியவை உள்ளன. தமிழகத்தின் இதயம் போன்ற திருச்சிக்கு இப்படியொரு பேருந்து முனையம் அவசியம். மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகம் போல திருச்சியில் காமராஜர் நூலகம் கட்டப்பட்டு வருகிறது. இடைநிற்றல் கூடாது என மாணவர்களை தேடிப்போய் மீண்டும் பள்ளிக்கு அனுப்புகிறோம்" என்று பேசினார்.
முன்னதாக, ராணுவ வீரர்களுக்காகவும், உயிரிழந்த பொதுமக்களுக்காகவும் விழா மேடையில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.