களத்தில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டு முதல்வர் ஸ்டாலின், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், களத்தில் முதல்வர் என்ற திட்டத்தின் கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் செல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் கடந்த ஏப்ரல் 26-ந் தேதி, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பல்வேறு கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்றார்.
தொடர்ந்து, விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற முதல்வர் ஸ்டாலின், கடந்த ஏப்ரல் 27-ந் தேதி மேற்கண்ட 3 மாவட்டங்களில், சிறந்த சமூக சேவை மற்றும் அரசு பணிகளை ஆற்றிய 14 பேரை பாராட்டி அவர்களுக்கு நினைவு பரிசை வழங்கினார்.
இதனிடையே ஆய்வு முடிந்து சென்னை திரும்பிய முதல்வர் ஸ்டாலின், விழுப்புரம், கடலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் பணியாற்றி வந்த முக்கிய அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளார். இதில் குறிப்பாக ஊரக வளர்ச்சி, வருவாய்த்துறை, பள்ளிக் கல்வித்துறை மற்றும் காவல் துறை அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ) இயக்குநர் ஆர்.மணி மாற்றப்பட்டு, டிஆர்டிஏவின் புதிய இயக்குநராக எஸ்.செல்வராணி நியமிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி முதன்மை கல்வி அதிகாரி (சிஇஓ) ஜி.சரஸ்வதி இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயல் அதிகாரியாக கே.கிருஷ்ணபிரியா நியமிக்கப்பட்டுள்ளார்.
கடலூர் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன் மாற்றப்பட்டு புதிய வருவாய் அலுவலராக ராஜசேகரன், நியமிக்கப்பட்டுள்ளனர். விழுப்புரம் நகர டிஎஸ்பி பார்த்திபன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஒவ்வொரு மாவட்டத்திலும் கள ஆய்வில் ஈடுபட்டு வரும் முதல்வர் அதிகாரிகள் சரியாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தி வரும், நிலையில் 3 முக்கிய மாவட்டங்களில் முதல்வரின் ஆய்வுக்குப் பின் அதிகாரிகளின் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது அரசு அலுவலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“