விழுப்புரம் மாவட்டத்தில் மழை சேதம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து விளக்கமளித்தார்.
அதன்படி, "விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்கள் இதுவரை கண்டிராத மழையை சந்தித்துள்ளன. கடந்த 2 நாள்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. இவை மட்டுமின்றி மற்ற மாவட்டங்களிலும் மழையின் அளவு வழக்கத்தை விட அதிகமாக இருந்துள்ளது.
புயலுக்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அமைச்சர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாவட்ட ஆட்சியர்களையும் தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுத்தோம். பல ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக குழுவினர் அனுப்பிவைக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 407 வீரர்கள் உள்ளடக்கிய 7 தேசிய பேரிடர் மேலாண்மை படையினர், 8 மாநில பேரிடர் மேலாண்மை குழுவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். கடலூர் மாவட்டத்திற்கு 56 வீரர்கள் கொண்ட இரு குழுவினரும், திருவண்ணாமலை மாவட்டத்திற்கு 30 வீரர்கள் கொண்ட ஒரு குழுவினரும் அனுப்பி வைக்கப்பட்டனர்.
மொத்தம் 637 தீயணைப்பு வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 147 நிவாரண மையங்கள் செயல்பட்டு வருகிறது. இவற்றில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஏராளமான பணியாளர்கள் மின் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உள் மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்கிறது. சுமார் 1,19,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் சேதம் எனக் கூறப்படுகிறது. முறையான கணக்கெடுப்பு நடத்தி, நிவாரணம் வழங்கப்படும். மற்ற மாவட்டங்களின் நிலை குறித்தும் கேட்டறிந்தோம்.
மழை சேதங்களை பார்வையிட மத்திய குழுவை அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்படும். மத்திய அரசு நிவாரணம் அளிக்கும் என நம்பிக்கை உள்ளது. ஒவ்வொரு முறையும் மத்திய அரசு தங்கள் கடமையை செய்ய மறுத்து வருகிறது. எனினும், மாநில அரசு சார்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“