சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை பயின்று உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வீதம் உதவித் தொகை வழங்கும் 'புதுமைப் பெண்' திட்டத்தின் தொடக்க விழா இன்று (செப். 5) நடைபெற்றது. மேலும், 26 தகைசால் பள்ளிகள், 15 மாதிரிப் பள்ளிகள் தொடக்க விழாவும் நடைபெற்றது.
சென்னை பாரதி மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்வர் ரவிந்த் கெஜ்ரிவால் கலந்துகொண்டார். அவரது முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் திட்டத்தை தொடங்கிவைத்தார்.
திட்டத்தில் முதற்கட்டமாக 1 லட்சம் மாணவிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது.
விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "கெஜ்ரிவால் முதல்வர் மட்டுமல்ல அவர் ஒரு போராளி. இந்திய வருவாய்த்துறை பணியை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்தவர். என்னுடைய அழைப்பை ஏற்று விழாவில் பங்கேற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நன்றி. புதுமைப் பெண் திட்டத்தின் மூலம் சுமார் 6
லட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற உள்ளனர். இதற்காக ரூ.698 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகள் ஏற்கனவே பிற கல்வித் தொகை பெற்றுவந்தாலும் இந்த திட்டத்தில் கூடுதலாக உதவித்தொகை பெறலாம். முதற்கட்டமாக 1 லட்சம் மாணவிகளின் வங்கிக்கணக்கில் ரூ.1000 நேரடியாக வரவு வைக்கப்பட உள்ளது. பாரதி மகளிர் கல்லூரியில் ரூ.25 கோடியில் சேதமடைந்த கட்டடங்கள் சீரமைக்கப்படும். 7 ஆய்வகங்கள், 3 நூலகங்கள் உள்ளிட்ட 3 அடுக்கு கட்டடம் கட்டப்படும்.
அனைவருக்கும் கல்வி - திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை
தமிழகத்தில் பள்ளிக்கு ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கற்றலோடு மாணவர்களின் பல்வேறு திறன்களையும் ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்கப்படும். படிக்க வைக்க பணம் இல்லையே என்ற தயக்கம் பெற்றோருக்கு இருக்க கூடாது. அனைவருக்கும் கல்வி என்பதுதான் திராவிட இயக்கத்தின் அடிப்படை கொள்கை. மாணவிகளுக்கு ரூ.1000 வழங்குவதை இலவசமாக நினைக்கவில்லை. சமூக நீதி என்பது சலுகை அல்ல, அரசின் கடமை. பெண் கல்வி ஊக்குவிக்கப்படும் போது, சமத்துவம் நிலைக்கும்.
தந்தையாக சொல்கிறேன், உங்களின் வளர்ச்சிக்காக தான் நாங்கள் இருக்கிறோம். புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி படிப்பவர்கள் எண்ணிக்கை கூடும். திறமைசாலிகள் எண்ணிக்கை கூடும். ஆசிரியர் தினம் மற்றும் வ.உ.சி பிறந்த தினமான இந்த நல்ல நாளில் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது" என்று பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil