/indian-express-tamil/media/media_files/2025/08/17/online-crop-loan-2025-08-17-14-51-02.jpg)
விவசாயிகளுக்கு உடனடி பயிர்க்கடன்: தருமபுரியில் ரூ.875 கோடி திட்டங்களை தொடங்கி வைத்த ஸ்டாலின்
தமிழக விவசாயிகள் இணையவழியில் விண்ணப்பித்த உடனேயே பயிர்க்கடன் வழங்கும் புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டையில் தொடங்கி வைத்தார்.
கூட்டுறவுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அதியமான் கோட்டையில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் இ-சேவை மையத்தை முதலமைச்சர் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரியகருப்பன், நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ஏ.வ.வேலு உட்பட பல அமைச்சர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
தருமபுரியில் ரூ.875 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடக்கம்
தொடர்ந்து, தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், மொத்தம் ரூ.875.29 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதில், ரூ.512.52 கோடி மதிப்பிலான 1044 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. மேலும், ரூ.362.77 கோடி மதிப்பில் 1073 முடிவுற்ற திட்டங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டன.
ஆளுநர் குறித்து முதலமைச்சர் விமர்சனம்
நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, தமிழ்நாடு இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக உள்ளது என்றார். இதை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஆளுநர் மேடைகளில் பேசுவதாக விமர்சித்தார். மேலும், தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என ஆளுநர் கூறுவது குறித்து, தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகளைப் பார்த்துவிட்டு, பாஜக ஆளும் மாநிலங்களில் ஆளுநர் பேச வேண்டும் என்றும் தெரிவித்தார். தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராக பேசிவரும் ஆளுநரை வைத்து பாஜக அரசியல் செய்வதாகவும் குற்றம்சாட்டினார். அதே சமயம், “என்னைப் பொறுத்தவரை அவர் தொடர்ந்து தமிழ்நாட்டில் இருக்க வேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.
முன்னதாக, ஒன்றிய முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் பிறந்தநாளையொட்டி, ஒட்டப்பட்டி அவ்வை வழி பகுதியில் உள்ள அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சமூக வலைதளத்தில் இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “எளிய வேளாண் குடும்பத்தில் தியாகராஜ சுந்தரமாகத் தோன்றி, கலைஞரின் மனசாட்சியாகத் திகழ்ந்து, இந்திய ஒன்றியத்தின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சராக உயர்ந்த முரசொலி மாறனின் பணிகளை நன்றியோடு நினைவுகூர்ந்து வணங்குகிறேன்” எனத் தெரிவித்தார். அவர் இதழியல், திரைப்படம் மற்றும் அரசியல் என அனைத்துத் துறைகளிலும் தனி முத்திரை பதித்தவர் என்றும், “திராவிட இயக்க வரலாறு, ஏன் வேண்டும் இன்பத் திராவிடம், மாநில சுயாட்சி” போன்ற கருத்துக் கருவூலங்களை நமக்காக வழங்கிச் சென்றவர் என்றும் குறிப்பிட்டார்.
செய்தி: க.சண்முகவடிவேல்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.