சென்னை லீலா பேலஸ் ஓட்டலில் இன்று (ஆக.21) தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை சார்பில் தமிழ்நாடு முதலீட்டு மாநாடு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ரூ.17,616 கோடி முதலீட்டில் 64,968 நபர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கக்கூடிய 19 தொழில் திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
ரூ.51,157 கோடி முதலீட்டில் 41,835 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய
28 தொழில் திட்டங்களுக்கு ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கடந்த 3 ஆண்டுகளில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் ரூ.9.94 லட்சம் கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒப்பந்தம் போட்டதுடன் நின்று விடாமல் அந்த நிறுவனங்களுக்கு தொழில் தொடங்க ஆதரவு சேவைகள் அளித்து வருகிறோம். முன்னேற்றத்தை கண்காணித்து, திட்டங்கள் தொடர்ந்து செயலாக்கப்படுவதையும் அரசு உறுதி செய்து வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, 19 வகையான திட்டங்களை ரூ.17,616 கோடி மதிப்பில் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம் 62,968 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். அதேபோல், 28 வகையான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளேன். இவற்றின் மொத்த மதிப்பு ரூ.51,157 கோடியாகும். இதன் மூலம் 41,835 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
தொழில் வளர்க்கும் நிறுவனம் மூலம் மாநிலம் வளரும். வேலைவாய்ப்பு மூலம் குடும்பம் வளரும். அந்த வகையில் வளர்ச்சிக்கான குறியீடாக தொழில் உள்ளது. அமைதியான சட்டம் - ஒழுங்கு உள்ள மாநிலத்தை தொழில் துறையினர் தேடி வருவார்கள். தமிழகத்தில் நிம்மதியாக தொழில் நடத்தலாம் என்பதால் தான், கடந்த 3 ஆண்டுகளாக அதிகளவிலான தொழில் நிறுவனங்கள் இங்கு வந்துள்ளன.
2030-க்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரத்தை அடையும் முயற்சியில் தமிழகம் உள்ளது. இன்று மோட்டார் வாகனங்கள், மருத்துவ உபகரணம், தகவல் தொழில் நுட்பம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களை நான் தொடங்கி வைத்துள்ளேன். இதன் மூலம், 1,06,803 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க உள்ளது. இதில் பெரும்பாலான வேலைவாய்ப்புகள் பெண்களுக்கானவையாகும்.
சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் வாழ்க்கை வசதி என்பதே அரசின் குறிக்கோள். இதை செயல்படுத்துவதுதான் எங்கள் முயற்சி. மிகுந்த திறமையும், படைப்பாற்றலை கொண்டவர்கள் தமிழக இளைஞர்கள். இவர்கள் உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணியாற்றி வருகின்றனர். எனவே, எங்கள் இளைஞர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தொழில்துறையினரை கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் நா.முருகானந்தம், தொழில்துறை செயலர் அருண்ராய் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“