திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை நவம்பர் 28-ம் தேதி திருச்சி வருகிறார்.
திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை (நவம்பர் 28-ம் தேதி) வருகை தரவுள்ளதையொட்டி சிறப்பு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இதையும் படியுங்கள்: தி.மு.க தலைமை நிலைய அலுவலக செயலாளராக கு.க.செல்வம் நியமனம்
திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக திருச்சி வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்குச் செல்கிறார்.
காட்டூரில் உள்ள இந்தப் பள்ளி 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இங்கு நிகழ் கல்வியாண்டில் 813 மாணவிகள் பயின்று வருகின்றனர். ஏழை, எளிய மாணவிகள் பயிலும் இந்தப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், நவீன ஆய்வகங்கள் மற்றும் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அனைத்து வகுப்புகளுக்கும் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என நீண்டகாலமாக பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், நாளை நவ.28-ம் தேதி நாளை திருச்சிக்கு வரும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தப் பள்ளிக்குச் செல்கிறார். இந்த சூழலில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி ஜவகரும் இணைந்து பள்ளியை பார்வையிட்டு, ஆய்வு செய்துள்ளனர்.
மேலும், முதல்வர் வருகையையொட்டி பள்ளி வளாகத்தில் பயன்படுத்தப்படாமல் உள்ள சேதமடைந்த வகுப்பறை கட்டிடங்களை இடிக்கும் பணி, பிற வகுப்பறை கட்டிடங்களுக்கு வண்ணம் பூசும் பணி, பழுதடைந்த மின் இணைப்புகள் மற்றும் விளக்குகளை சீரமைக்கும் பணி ஆகியவை தற்போது நடைபெற்று வருகின்றன. மேலும், திருச்சி- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து பள்ளிக்குச் செல்லும் சாலை புதிதாக அமைக்கப்பட்டு, சாலையோரத்தில் உள்ள சுற்றுச்சுவர்களில் அரசின் திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக பள்ளிகளுக்குறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவிக்கையில்; “இந்தப் பள்ளிக்கு வரும் தமிழக முதல்வர் இங்கு புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டவும், மேம்படுத்தப்பட்ட கணினி மற்றும் அறிவியல் ஆய்வகங்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கவும் அடிக்கல் நாட்டுவார்”.
மேலும், அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில் ஸ்டெம் ஆன் வீல்ஸ் (STEM on Wheels) என்ற அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் குறித்த நடமாடும் ஆய்வகத்தை இந்தப் பள்ளியிலிருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, அன்று மாலை கங்கைகொண்ட சோழபுரம், மாளிகைமேடு பகுதியில் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். மறுநாள் (நவ.29) காலை அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று, நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர், மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கின்றனர்.
க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil