"ரூபாயில் அச்சிடப்பட்ட அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிக்க தயக்கம் ஏன்?": ஸ்டாலின் கேள்வி

இந்திய ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள அனைத்து மொழிகளையும் ஆட்சி மொழியாக அறிவிப்பதில் தயக்கம் காட்டுவது ஏன் என முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

author-image
WebDesk
New Update
Stalin

இந்தி மொழி திணிப்பு குறித்து பல்வேறு தகவல்களை முன்வைத்து முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் சில கேள்விகளையும் அவர் எழுப்பியுள்ளார்.

Advertisment

அதில், "சோவியத் யூனியன் என்ற மாபெரும் ஒன்றியம் பல்வேறு மொழிகளைப் பேசும் தேசிய இனங்களைக் கொண்டிருந்தது. எனினும், பெரும்பான்மை மொழியான ரஷ்ய மொழி ஆதிக்கம் செலுத்தியது. சோவியத் யூனியன் சிதைவடைந்து பிரிந்ததில் மொழி ஆதிக்கமும் ஒரு காரணமாக அமைந்தது.

தாய்மொழி என்பது ஒரு தேன்கூடு. அதில் கை வைப்பது ஆபத்து. கட்டாயமாக ஒரு மொழியைத் திணித்தால் அது பகை உணர்ச்சிக்கே இடம் கொடுக்கும், நாட்டின் ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். மொழித்திணிப்பினால் பிளவுபட்ட தேசங்களின் வரலாறு, நம் பக்கத்திலேயே இருக்கிறது.

கிழக்கு வங்காளத்தினர் தங்கள் தாய்மொழியான வங்காளத்தையும் தேசிய மொழியாக அறிவிக்கக் கோரி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தனர்; போராட்டங்களை நடத்தினர்.

Advertisment
Advertisements

1971-இல் கிழக்கு வங்காள மக்களின் விடுதலைப் போராட்டம் உச்சத்தை எட்டியது. இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியின் ஆதரவுடன் விடுதலைப் போராட்டம் வென்றது.

வங்கதேச விடுதலைக்காக இந்திய இராணுவம் பங்கேற்ற போரின்போது, இந்தியாவிலேயே மிக அதிக நிதியை அளித்த மாநிலம் என்ற பெருமையைப் பெற்றது தலைவர் கலைஞரின் ஆட்சி நடைபெற்ற தமிழ்நாடு.

பிரதமர் நேரு ஆட்சிக்காலத்தில் சீனா படையெடுத்தபோதும், இந்தியா பாகிஸ்தான் போரின்போதும் இந்திய மாநிலங்கள் அனைத்திற்கும் முன்னோடியாகப் போர் நிதி
திரட்டித் தந்த தி.மு.க-வையும் அதன் அரசையும் பார்த்து தேசவிரோதிகள் என்கிறார்கள், தேசத் தந்தையைப் படுகொலை செய்த கோட்சேயின் கொள்கையை ஆதரிப்பவர்கள்.

நம் தாய்மொழி போலவே மற்றவர்களின் தாய்மொழியையும் மதிக்கிறோம். இந்தியைத் தாய்மொழியாகக் கொண்டவர்களும் நம் சகோதர, சகோதரிகள்தான்.

இந்திய அரசியல் சட்டம் 351-ஆவது பிரிவைச் சுட்டிக்காட்டி, இந்தி மொழியை வளர்க்கும் பொறுப்பை ஒன்றிய அரசு தீவிரமாக மேற்கொள்கிறது.

செப்டம்பர் 14-ஆம் நாளை 'இந்தி திவஸ்' என்ற பெயரில் கொண்டாடுகிறது. அந்த நாளில், இந்தித் திணிப்பு முழக்கங்களை ஒன்றிய ஆட்சியாளர்கள் முன்வைக்கிறார்கள்.

'கன்னடத்தைப் புறக்கணித்து, இந்தியைத் திணிப்பவர்களை ஏற்க மாட்டோம்' என்று கூறிக் கர்நாடகாவில் இந்தி எழுத்துகளை அழிப்பது பற்றிய காணொலி சமூக வலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

ரூபாய் நோட்டில் அச்சிடப்பட்டுள்ள மொழிகள் அனைத்தையும் இந்தியாவின் ஆட்சிமொழியாக அறிவிக்கத் தயக்கம் ஏன்?

எங்கள் அண்ணா அன்று மாநிலங்களவையில் கேட்டதைத்தான் அவரது தம்பிகளான நாங்களும் கேட்கிறோம். அவரால் பெயர் சூட்டப்பட்ட எங்கள் தமிழ்நாடு கேட்கிறது. இலட்சியம் நிறைவேறும் வரை கேட்டுக்கொண்டே இருப்போம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindi Impositon CM stalin

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: