/indian-express-tamil/media/media_files/2025/05/06/c30Zxl2th90tsSuJu0Be.jpg)
மாநில சுயாட்சியை பாதுகாப்பதற்காக அனைவரும் முன்வர வேண்டும் என வலியுறுத்தி 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக மாநில அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் மீது ஆளுநர் மற்றும் குடியரசு தலைவர் ஆகியோர் முடிவெடுக்க காலக்கெடு நிர்ணயம் செய்து உத்தரவிடப்பட்டது.
இது மட்டுமின்றி ஆளுநர் ஆர்.என். ரவியால் கிடப்பில் போடப்பட்டிருந்த தமிழ்நாடு அரசின் 10 மசோதாக்களுக்கும், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இந்த தீர்ப்பு அரசியல் களம் மட்டுமின்றி சட்ட ரீதியாகவும் பேசுபொருளானது.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை தொடர்ந்து, 14 கேள்விகளை முன்வைத்து குறிப்பு ஒன்றை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அனுப்பியிருந்தார். குடியரசு தலைவரின் இந்த செயலுக்கு ஏற்கனவே முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், குடியரசு தலைவரின் இந்தக் குறிப்பை எதிர்த்து மாநில சுயாட்சியை காக்க வேண்டும் என வலியுறுத்தி 8 மாநில முதலமைச்சர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், "உச்ச நீதிமன்றத்திற்கு குடியரசு தலைவர் அனுப்பிய குறிப்பினை, இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு மற்றும் மாநில சுயாட்சியை பாதுகாக்க உறுதிபூண்டுள்ள அனைத்து மாநில அரசுகளும் எதிர்க்க வேண்டும்.
இந்திய அரசியலைமப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பை பாதுகாக்க அனைவரும் முன்வர வேண்டும். தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினைக் கேள்விக்குள்ளாக்குவதே குடியரசு தலைவர் அனுப்பிய குறிப்பின் நோக்கம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Union BJP Government is attempting to overturn the Supreme Court’s landmark verdict that upheld the rights of elected State Governments against obstructive Governors.
— M.K.Stalin (@mkstalin) May 18, 2025
I have urged all non-BJP States and regional parties to unite in this crucial legal battle to protect… pic.twitter.com/aAEQkUUkSi
இந்தக் கடிதத்தை கேரளா, தெலங்கானா, கர்நாடகா, ஜார்கண்ட், பஞ்சாப், ஹிமாச்சல பிரதேசம், ஜம்மு காஷ்மீர் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்களுக்கு ஸ்டாலின் எழுதியுள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.