சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட ஆட்சியர்கள் ஆய்வு கூட்டம் இன்று முதல் ( ஜுன் 11) 3 நாட்கள் நடைபெறுகிறது. இன்று 14 மாவட்ட ஆட்சியர்கள் கலந்து கொண்டனர். தமிழக அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்களின் நிலை, அடுத்து புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்துவது என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது ஆட்சியர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தலைகளை ஸ்டாலின் வழங்கினார். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், புதுமைப்பெண் திட்டம் போல, மாணவர்களுக்கு 1000 ரூபாய் வழங்கும் தமிழ் புதல்வன் திட்டம் விரைவில் தொடங்கப்படும்.
தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தி இருக்கிறோம். போதை பொருள் நடமாட்டம் என்பது சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை மட்டுமல்ல, சமூக ஒழுங்குப் பிரச்சினை. போதைப் பொருள் நடமாட்டம் இருக்கும் என கண்டறியப்படும் பகுதிகளில் தனிக்கவனம் செலுத்த வேண்டும். இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
"கலைஞர் கனவு இல்லம்" திட்டத்திற்கும்; இரண்டரை லட்சம் தொகுப்பு வீடுகளைப் புனரமைக்கும் திட்டத்திற்கும் தனி கவனம் செலுத்த வேண்டும். திட்டங்களில் தனிக்கவனம் செலுத்தி, புதிய உத்வேகத்துடன் செயல்படுங்கள் என்று கூறினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், அடுத்த 2 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் முக்கியமான ஆண்டுகள். நலப் பணிகளை சிறப்பாக செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது. வருவாய் துறையில் பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் தனிக் கவனம் செலுத்த வேணடும்.
தமிழ் புதல்வன், காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சமூக நலத் திட்ட செயலாக்கம், கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசு சேவைகள் மக்களுக்கு கிடைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம் என்று கூறினார்.
தமிழ்நாட்டில் 2026-ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற உள்ள நிலையில், திட்டங்களை செயல்படுத்துவதில் திமுக அரசு முனைப்புடன் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“