நம்மைக் காக்கும் 48 என்ற கட்டணமில்லா உயிர்காக்கும் அவசர சிகிச்சைக்கான திட்டத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின் நேற்று (18-12-2021) மேல்மருத்துவத்தூரில் தொடங்கி வைத்த பின்னர், பங்காரு அடிகாளாரை சந்தித்து பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெற்ற இன்னுயிர் காப்போம் என்ற திட்ட தொடக்க விழாவில், சாலை விபத்தால் ஏற்படும் உயிரிழப்பைக் குறைத்திட, விபத்து ஏற்பட்ட முதல் 48 மணி நேரத்திற்குள் கட்டணமில்லா உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்கான நம்மைக் காக்கும் 48 என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இன்னுயிர் காப்போம் -நம்மைக் காக்கும் 48" திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 201 அரசு மருத்துவமனைகள் மற்றும் 408 தனியார் மருத்துவமனைகள், என மொத்தம் 609 மருத்துவமனைகள் உரிய தகுதியின் அடிப்படையில் இணைக்கப்பட்டு, மருத்துவச் சிகிச்சைகள் வழங்கிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டு அட்டை உடையவர்கள், இல்லாதவர்கள், பிற மாநிலத்தவர், வெளிநாட்டவர் என அனைவருக்கும் வருமான வரம்பு ஏதும் கணக்கில் கொள்ளாமல், தமிழ்நாட்டின் எல்லைக்குள் ஏற்படும் சாலை விபத்துகளில் காயமடைவோர்களுக்கு முதல் 48 மணி நேரம் வரை கட்டணமின்றி மருத்துவ சிகிச்சை அளிக்கப்படும். இத்திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 81 மருத்துவச் சிகிச்சை முறைகளுக்கு நபர் ஒருவருக்கு ரூ.1 லட்சம் வரை செலவினத்தில் சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
இந்த விழா முடிந்த பின்னர் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்காரு அடிகளாரின் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினரைச் சந்தித்தார். அங்கு பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ.ப.அன்பழகன் ஆகியோர் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்து வீட்டுக்குள் அழைத்து சென்றனர்.
இதனை தொடர்ந்து பங்காரு அடிகளாருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின், உடல் நலம் குறித்து அவரிடம் விசாரித்தார். பங்காரு அடிகளாரும் முதல்வருக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் ஆர்வமாக பேசிய பங்காரு அடிகளார் தனது குடும்ப உறுப்பினர்களை முதல்வருக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்பு பங்காரு அடிகளாளார் குடும்பத்தினர் ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கி கவுரவித்தனர். மேலும், முதல்வர் ஸ்டாலினுடன் பங்காரு அடிகளார் குடும்பத்தினர் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். . முதல்வருடன் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil