Advertisment

தமிழக பள்ளிகளில் “வானவில் மன்றம்” திட்டம்; திருச்சியில் முதல்வர் துவக்கி வைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 2- நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தமிழக பள்ளிகளில் “வானவில் மன்றம்” திட்டம்; திருச்சியில் முதல்வர் துவக்கி வைப்பு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் 2- நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அந்தவகையில் திருச்சிக்கு விமானம் மூலம் வந்த முதல்வரை மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சிவசங்கர், மாநகராட்சி மேயர் அன்பழகன், திருச்சி எம்.பி.திருநாவுக்கரசர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

Advertisment

 பின்னர் திருச்சி-தஞ்சை சாலையில் உள்ள காட்டூர் - பாப்பாக்குறிச்சி அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் “வானவில் மன்றம்” என்ற புதிய திட்டத்தை தமிழகம் முழுவதும் தொடங்கி வைத்து, 100 நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வக வாகனங்களைக் கொடியசைத்து முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

publive-image

  பள்ளிக்கல்வித் துறையின் 2022-23ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் அறிவியல், கணித ஆர்வத்தைத் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் மற்றும் கணித ஆய்வகங்கள் மூலம் மாதந்தோறும் அறிவியல் பரிசோதனைகள் மற்றும் கணிதத்தை உரிய வழிகாட்டுதலுடன் மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுவதுடன், மாணவர்களே உருவாக்கிய அறிவியல் கருவிகளும் காட்சிப்படுத்தப்படும். 25 இலட்சம் அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் இத்திட்டம் ரூ.25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  அந்த அறிவிப்பிற்கிணங்க, அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மற்றும் கணித ஆர்வத்தைத் தூண்டும் வானவில் மன்றத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

   பின்னர், காட்டூர் - பாப்பாக்குறிச்சி, அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப் பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்களின் வழிகாட்டுதலின்படி மாணவர்கள் மேற்கொண்ட அறிவியல் பரிசோதனைகளை பார்வையிட்டார். மேலும், அப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடினார்.

   குழந்தைகளிடையே இயல்பாகவே உள்ள படைப்பாற்றல் ஆர்வத்தினை வளர்த்தெடுத்து அறிவியல் கற்றலுக்கு பயன்படுத்துதல், அறிவியல் கற்பதன் மூலமாக கிடைக்கும் ஆர்வத்தினை தக்க வைத்தல், இந்த ஆர்வத்தின் மூலம் புதுமைகளைக் காணும் மனப்பாங்கினை வளர்த்தெடுத்தல், தாம் பெற்ற அறிவினை தமக்கான மொழியில் பகிர்ந்து அறிவியல் மொழி பழகுதல், அறிவியல் மனப்பான்மையை பரவலாக்குதல், அன்றாட வாழ்க்கையிலுள்ள அறிவியலை உணர்தல், சமூகவியல் இலக்கியத்துடனான அறிவியலைப் புரிந்து கொள்ளுதல் ஆகியவை வானவில் மன்றத்தின் நோக்கங்கள் ஆகும்.

   தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும் வானவில் மன்றத்தின் அடிப்படை முழக்கம் “எங்கும் அறிவியல், யாவும் கணிதம்” என்பதாகும். அரசுப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்க்கவும், எதையும் ஆராய்ந்து பார்த்து கேள்வி கேட்கும் பழக்கத்தை உருவாக்கவும், அறிவியல் மற்றும் கணிதம் தொடர்பாக, புதியவற்றை அறிந்து கொள்ளும் எல்லையில்லா ஆர்வத்தை உண்டாக்கவும் இம்மன்றம் உருவாக்கப்பட்டுள்ளது.

   அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலையும் கணிதத்தையும் கற்றுத் தரும் ஆசிரியர்களுக்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. கற்பித்தலில் இதுவரை அவர்கள் கையாண்ட வழிமுறைகளை பகிர்ந்து கொள்வதற்கும், இத்திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்திட ஆலோசனைகள் வழங்குவதற்கும், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தில் பங்கு பெற விருப்பம் தெரிவித்த ஆசிரியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

   இத்திட்டத்திற்காக தமிழ்நாடு முழுவதும் 710 ஸ்டெம் கருத்தாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்கள் நடமாடும் அறிவியல் மற்றும் கணித பரிசோதனை ஏதுவாளர்களாக செயல்படுவார்கள். மேலும், அவர்கள் 6 முதல் 8 ஆம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எளிய அறிவியல் பரிசோதனைகளுக்கான (Experiments) கருவிகளை உடன் எடுத்து வருவார்கள்.

   அரசுப் பள்ளிகள் தோறும் வரும் கருத்தாளர்கள் பரிசோதனைகளுக்கான ஏற்பாடுகளைச் செய்து, ஆசிரியர்கள் துணையோடு மாணவர்களுக்கு பரிசோதனைகளை செய்து காண்பிப்பார்கள். மேலும், ஆசிரியர்களுக்கு அறிவியல் மற்றும் கணித வல்லுநர்களுடன் இணைய வழி (டெலிகிராம்) கலந்துரையாடலுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

publive-image

   இதன்மூலம் சக ஆசிரியர்களுடனான துறை சார்ந்த உரையாடலுக்கு வாய்ப்பு தருவதோடு, பிற ஆசிரியர்கள் அறிவியலையும் கணிதத்தையும் எவ்வாறு கற்றுத் தருகிறார்கள், மாணவர்களின் சந்தேகங்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்று அறிந்து கொள்வதோடு, கற்பித்தல் முறைகளையும் பிறரிடம் இந்நிகழ்வின் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். நவீன தொழிநுட்பங்களையும் கணிதம் சார்ந்த புதிய யுக்திகளையும் அறிந்து கொள்வதுடன், அவற்றை வகுப்புகளில் குழந்தைகளிடத்தில் பகிர்ந்து கொள்ளவும் இந்தக் கலந்துரையாடல் உதவும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  காட்டூர் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் பெரம்பலூர் புறப்பட்ட முதல்வர் திருச்சி சென்னை சாலையில் சஞ்சீவி நகர் அருகே திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்சி கொடியேற்றும் நிகழ்வில் கலந்துக்கொண்டார். அங்கே 70 அடி உயர கம்பத்தில் திமுக கட்சி கொடியை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஏற்றி வைத்து அன்பில் மகேஷை குளிர்வித்தார்.

   திருச்சி நிகழ்ச்சியில் திமுக துணைப் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான பெரம்பலூர் ராஜா, சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், கிழக்கு மாநகரச் செயலாளர் மு.மதிவானன், தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், என்.கோவிந்தராஜன், குணசேகரன், செந்தில், பகுதி கழகச் செயலாளர் மோகன், டி.பி.எஸ்.எஸ்.ராஜ், எம்.தர்மராஜ், மணிவேல், நீலமேகம், 36-வது வார்டு மாமன்ற உறுப்பினர் கார்த்தி மற்றும் மாவட்ட ஒன்றிய நகர பகுதி பேரூர் கழக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்துக்கொண்டனர்.

செய்தி: க.சண்முகவடிவேல்

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment