தமிழ்நாட்டில் மார்ச் மாதம் 5-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும், இதில் பங்கேற்க 40 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (பிப் 25) சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது, "இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கை குறித்து பல்வேறு விளக்கங்கள் கேட்கப்பட்டன. இவை தவிர முக்கிய முடிவு ஒன்று எடுக்கப்பட்டுள்ளது.
மிகப்பெரிய உரிமை போராட்டத்தை நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ்நாடு தள்ளப்பட்டுள்ளது. எனவே, வரும் மார்ச் 5-ஆம் தேதி அனைத்து கட்சி கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40 கட்சிகளை கூட்டத்திற்கு அழைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு இன்று கடிதம் அனுப்பப்படவுள்ளது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தப்படவுள்ளது. அனைத்து வளர்ச்சி துறைகளிலும் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. எனினும், தமிழ்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 39 நாடாளுமன்ற தொகுதிகள் உள்ளன. இதை குறைக்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. மத்திய அரசு, 2026-ஆம் ஆண்டு மக்களவை தொகுதிகளை மறுசீரமைப்பு செய்யவுள்ளது. மக்கள் தொகை கட்டுப்பாடு என்பது இந்தியாவின் முக்கிய இலக்கு. அதில் தமிழ்நாடு வெற்றிபெற்றிருப்பது எல்லோருக்கும் தெரியும்.
பல்வேறு முயற்சிகளின் மூலம் இதனை சாதித்து இருக்கிறோம். மக்கள் தொகை எண்ணிக்கை குறைவாக இருக்கும் காரணத்தினால், நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையையும் குறைக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால், தமிழ்நாட்டில் ஏறத்தாழ 8 தொகுதிகளை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
நமக்கான பிரதிநிதித்துவம் குறைந்து விடும் வாய்ப்பு உள்ளது. இதனால் தமிழ்நாட்டின் குரல் நசுக்கப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்த கவலை மட்டும் இது கிடையாது. மாநில உரிமை தொடர்பான பிரச்சனையாக இது உள்ளது. அந்த வகையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து ஒன்றிணைந்து பேசி முடிவு எடுக்க வேண்டும்.
அதற்கான முதற்கட்ட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து கட்சியினரும் அரசியலை கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.