தி.மு.க. பொருளாளரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு, தன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை தொகுத்து 'பாதை மாறாப் பயணம்' என்ற தலைப்பில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகம் 2 பாகங்களை கொண்டது. முதல் பாகத்தில் கருணாநிதியுடன் இருப்பது போன்றும், 2-ம் பாகத்தில் தி.மு.க. தலைவரும், முதல்வருமான ஸ்டாலின் உடன் இருப்பது போன்றும் நூலின் அட்டைப் படம் உள்ளது. .
'பாதை மாறாப் பயணம்' நூல் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் நேற்று (ஜனவரி 7) மாலை நடந்தது. விழாவில் முதல்வர் ஸ்டாலின், தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன், தி.மு.க. துணை பொதுச்செயலாளர் கனிமொழி, அமைச்சர் ஐ.பெரியசாமி, உதயநிதி ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, பாடாலாசிரியர் கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 'பாதை மாறாப் பயணம்' நூலை ஸ்டாலின் வெளியிட கி. வீரமணி மற்றும் வைரமுத்து ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
அப்போது டி.ஆர்.பாலு குறித்து ஸ்டாலின் பேசினார். அவர் கூறுகையில், " நாங்கள் சிறையிலும் ஒன்றாகத் தான் தங்கி இருந்தோம். சிறையில் அண்ணா, கருணாநிதி பிறந்தநாள், மும்பெரும் விழா, பொங்கல் பண்டிகை, பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தி உள்ளோம். இந்நேரத்தில் வெளிப்படையாக ஒன்றைக் கூட விரும்புகிறேன். பாலு கோவப்படக் கூடாது" என்றார்.
தொடர்ந்து, "நான் ரூ.5000 கொடுத்து கார் ஒன்று வாங்கினேன். அப்போது ரூ.5000 பெரிய தொகை தான். அந்த கார் வாங்கி சில நாட்களில் விபத்து ஏற்பட்டது. ரூ.5000 கார் வாங்கி ரூ.7000 செலவு செய்தேன். அதனால் . காரை விற்று விடலாம் என நினைத்தேன். அந்த காரை நான் வாங்கி கொள்கிறேன் என்று பாலு சொன்னார். லாபம் வேண்டாம். அசல் மட்டும் போதும் என்று கூறி காரை அவருக்கு விற்றேன். ரூ.12,000 கொடுத்தால் போதும் என்று சொன்னேன். அவர் ரூ. 100 அட்வான்ஸ் கொடுத்தார். அவ்வளவு தான் அவர் அதை மறந்துவிட்டார்.
2 மாதம் கழித்து மீண்டும் ஒரு ரூ.100 கொடுத்தார். மொத்தம் இதுவரை ரூ. 2000 வரை கொடுத்திருப்பார். ஆகவே இன்னைக்கும் எனக்கு அவர் கடன்காரர் ஆகத்தான் இருக்கிறார் என ஸ்டாலின் நகைச்சுவையாக கூறினார். இதனால் அரங்கில் சிரிப்பலை ஏற்பட்டது. எங்களது நட்பு இப்படி இன்றும் தொடர்கிறது" என்று ஸ்டாலின் கூறி மகிழ்ந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/