சொல்லாததையும் செய்திருக்கிறோம்; 8 மாத செயல்பாடுகள் குறித்து வீடியோ வெளியிட்ட ஸ்டாலின்

கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றியுள்ளோம் என திமுக அரசின் 8 மாத செயல்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் வீடியோ வெளியீடு

CM Stalin releases video on DMK government’s 8 month activities: வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றி இருக்கிறோம் என்று, திமுக அரசின் 8 மாத செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், திமுக ஆட்சி அமைத்ததும் செயல்படுத்தக்கூடிய திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகள் குறித்து மக்களுக்கு அறிவிப்பேன் என்று சொல்லியிருந்தேன். அந்த வகையில் இந்த காணொலியில் உங்களைச் சந்திக்கிறேன். நான் பதவியேற்கும் போது எனக்கு வாக்களித்தவர்கள் மட்டுமின்றி வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்து முதல்வராக இருப்பேன் என உறுதியளித்தேன்.

முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் 5 முக்கிய திட்டங்களுக்கு கையெழுத்திட்டேன். அவை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணமாக ரூ.4000 வழங்கப்படும், ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும், நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்திற்கான தனி துறை உருவாக்கம், தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான காப்பீட்டு திட்டம், ஆகியவற்றில் முதலில் கையெழுத்திட்டேன். கோடிக்கணக்கான மக்களின் எதிர்பார்ப்பை ஒற்றை கையெழுத்தில் நிறைவேற்றிய அரசு தான் இந்த அரசு.

தமிழ்நாடு முழுக்க சுற்றி சுற்றி நான் பெற்ற மனுக்கள் அனைத்தின் மீதும் வெறும் 100 நாட்களில் நான் தீர்வுகளை தேடிக்கொடுத்து இருக்கிறேன். தமிழ்நாட்டில் 2.15 கோடி குடும்பங்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மக்களை தேடி மருத்துவம் திட்டம் மூலம் இதுவரை 50 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர். இல்லம் தேடி கல்வி திட்டம் மூலம் 80138 இல்லம் தேடி கல்வி மையங்களை உருவாக்கினோம். இதனால் பல லட்சம் மாணவர்கள் பலன் அடைந்துள்ளனர்.

18 லட்சம் அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. கூட்டுறவு நகைக்கடன் 5 பவுனுக்கும் கீழே வாங்கியவர்களுக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.2000 கோடி கடன் ரத்து செய்யப்பட்டுள்ளது. இன்னுயிர் காப்போம் திட்டத்தில் இதுவரை 4000க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றுள்ளனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படுகிறது. மாநிலம் முழுவதும் நலத்திட்டங்கள் சேரும் வகையில் செயல்பட்டு வருகிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்த திட்டங்கள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் நிறைவேற்றுகிறோம். வெளிப்படையான நிர்வாகத்தை திமுக அரசு நடத்தி வருகிறது.

ஆளுநர் உரையில் 66 அறிவிப்புகள் வெளியிடப்பட்டு 49 அரசாணைகள் இதற்காக வெளியிடப்பட்டது. பதவி ஏற்றுக் கொண்ட முதல் தற்போது வரை 2619 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன். தமிழ்நாட்டில் மாதத்தில் சட்டசபையில் 1641 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் 1237 அறிவிப்புகள் அரசாணையாக வெளியிடப்பட்டு செயலுக்கு வந்துவிட்டது. மீதம் உள்ள அறிவிப்புகள் சீக்கிரம் செயலுக்கு வரும். ஒன்று மட்டும் நிச்சயம், கொடுத்த வாக்குறுதிகளை இந்த ஸ்டாலின் நிச்சயம் நிறைவேற்றுவான்.

நீங்களே எங்களின் தேர்தல் வாக்குறுதிகளை ஒப்பிட்டு பார்த்து நாங்கள் செயல்பட்டு இருக்கிறோமா என்று பார்த்துக்கொள்ளுங்கள். தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும் செய்திருக்கிறோம். எங்கள் செயல்பாடுகளின் ஆதாரம் பொதுவெளியில் இருக்கு. சும்மா வாய் வார்த்தைக்காக சொல்பவர்கள் அல்ல நாங்கள்… நாங்கள் சொல்வதை கல்வெட்டு போல மனதில் பதிய வைத்து செயல்பட்டு வருகிறோம். கோட்டையில் அமர்ந்து உத்தரவு போடும் முதல்வர் அல்ல நான்.. மக்களோடு மக்களாக இணைந்து அவர்களின் சிந்தனைகளை செயல்படுத்தும் முதல்வராக உள்ளேன். கொரோனா காலத்தில் கொரோனா வார்டுக்கு சென்றேன். மழை வெள்ளத்தில் இறங்கி மக்களை சந்தித்தேன். குமரி, தஞ்சை, கோவை, காஞ்சி என்று எல்லா மாவட்டங்களிலும் என் கால்கள் சென்று இருக்கின்றன.

மக்கள் தடுப்பூசி போடும் இடங்களுக்கு, காவல்நிலையங்களுக்கு, ரேஷன் கடைகளுக்கு நேரடியாக சென்று இருக்கிறேன். என்னை கலைஞர் இப்படித்தான் பழக்கி இருக்கிறார். மக்களோடு வாழ் என்று சொன்னார் அண்ணா. அதைத்தான் நான் செய்து இருக்கிறேன். நான் மக்களோடு இருப்பேன். அவர்களுக்காக சேவை செய்வேன்.. அவர்களுக்காக தொடர்ந்து உழைக்க காத்துகொண்டு இருக்கிறேன். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm stalin releases video on dmk governments 8 month activities

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express