தி.மு.க முன்னாள் தலைவரும், மறைந்த முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி தமிழ் மொழி, தமிழ்நாட்டிற்கு ஆற்றிய பணியை சிறப்பிக்கும் வகையில் மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. பேனா நினைவுச் சின்னம் ரூ. 80 கோடி மதிப்பில் கட்டடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கடலில் நினைவுச் சின்னம் அமைக்க எதிர்க்கட்சிகள், பல்வேறு சமூக அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும் எனத் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறுகையில், கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க கூடாது. கருணாநிதியின் நினைவிடத்திற்கு முன் அமைக்கலாம். ரூ.80 கோடியில் நினைவுச் சின்னம் எதற்கு? மக்கள் வரிப்பணத்தை பல நல்ல திட்டத்திற்கு பயன்படுத்த வேண்டும். எழுதாத பேனாவை எங்கு வைத்தாலும் ஒன்றுதான். நினைவிடம் முன் வைக்கலாம் என்று கூறி விமர்சனம் செய்தார்.
இந்நிலையில், நேந்று கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு முதல்வர் ஸ்டாலின் மணமக்களை வாழ்த்தினார். அதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசுகையில், "எப்போது எல்லாம் கருணாநிதியின் பேனா குணிந்ததோ அப்போது எல்லாம் தமிழ்நாடு தலைநிமிர்ந்தது. வள்ளுவர் கோட்டத்தை உருவாக்க பாடுபட்டது அவரது பேனா. குடிசைகளை மாற்றி அடுக்கமாடி குடியிருப்பு கட்ட உத்தரவிட்டு கையெழுத்திட்டது அவரது பேனா. தமிழ் சமூதாயத்தின் தலையெழுத்தை மாற்றி அமைத்தது கருணாநிதி பேனா. எண்ணற்ற நல்ல திட்டங்களை வகுத்து கொடுத்தது அவரது பேனா" என பேசினார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்கு முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக பதிலளித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/