புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய குடியரசு கட்சியின் நிறுவனரும் தலைவருமான செ.கு தமிழரசன் தெரிவித்துள்ளார். இது குறித்த விவரம் வருமாறு;
புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் நடைபெற்ற வன்கொடுமை பிரச்சனைக்கு எதிராக திருச்சியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் செ.கு.தமிழரசன் கலந்து கொண்டு பேசியதாவது; புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் வேங்கை வயல் கிராமத்தில் நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகளை கலந்த சமூக விரோதிகள் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும், வேங்கை வயல் கிராமத்தில் கிராம பட்டியல் இன மக்களுக்கு வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரசு சார்பு உதவிகளை உடனடியாக வழங்கக் கூறி இந்திய குடியரசு கட்சி சார்பில் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு திருச்சி மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். அரியலூர் மாவட்ட தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ஆறுமுகம், மோகன்ராஜ்,,விமல்மாநில நிர்வாகிகள் பிரபு,மங்கா, கௌரிசங்கர் அன்புவேந்தன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் நிறுவனத் தலைவர் செ.கு. தமிழரசன் கலந்துகொண்டு பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முடிவில் முத்துக்குமார் நன்றி கூறினார்.
முன்னதாக செ.கு. தமிழரசன் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது;
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் வேங்கை வயல் கிராமத்தில் நடந்த சம்பவம் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. போர் நடக்கும் போதும் கூட ஒரு விதிமுறையை கடைப்பிடிப்பார்கள். ஆனால் இங்கு இந்த செயல் நடந்தது கொலைக்கு சமமாகும்.
இந்த பிரச்சனையை நாங்கள் சும்மா விட மாட்டோம். ஐக்கிய நாட்டு சபை வரை கொண்டு செல்வோம். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, மக்களுக்கு அநீதி நடக்கும் பொழுது அரசு தட்டி கேட்க வேண்டும்.

இந்த விஷயத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என செ.கு. தமிழரசன் தெரிவித்தார்.
செய்தி: க.சண்முகவடிவேல்