/indian-express-tamil/media/media_files/nHuD4WxXylHyHctShTKt.jpg)
அரசு வழங்கும் நலத்திட்ட உதவிகள் அனைத்து மக்களையும் சென்றடைந்ததா என்பதை கண்டறிவதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டந்தோறும் கள ஆய்வு செய்து வருகிறார். அதனடிப்படையில், நாளை (ஜன 21) மற்றும் நாளை மறுநாள் (ஜன 22) ஆகிய இரு நாட்களும் சிவகங்கை மாவட்டத்தில் தனது கள ஆய்வை ஸ்டாலின் மேற்கொள்கிறார்.
அதன்படி, முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிக்கான விவரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. நாளை காலை சென்னையில் இருந்து திருச்சிக்கு விமானம் மூலமாக ஸ்டாலின் வரவிருக்கிறார். இதைத் தொடர்ந்து, திருச்சியில் இருந்து காரில் பயணம் செய்து காரைக்குடி வந்தடைகிறார். காலை சுமார் 11:15 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள திருமதி லட்சுமி வளர் தமிழ் நூலகம் திறப்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
இதன் தொடர்ச்சியாக, பகல் 12 மணிக்கு அழகப்பா பல்கலைக்கழக கூட்டரங்கில் ஸ்டாலின் உரையாற்றுகிறார். பின்னர், மாலை 5 மணிக்கு காரைக்குடி பி.எல்.பி பேலஸில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்துகிறார்.
இதையடுத்து, நாளை மறுநாள் (ஜன 22) காரைக்குடியில் இருந்து காரில் புறப்பட்டு, குன்றக்குடி, திருப்பத்தூர் புறவழிச்சாலை அரளிக்கோட்டை - ஓங்கூர் வழியாக சிவகங்கைக்கு செல்கிறார். அங்கு, மன்னர் அரசு கல்லூரி மைதானத்தில் நடைபெறும் நிகழ்வில் கலந்து கொண்டு சுமார் 50 ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்குகிறார். மேலும், நிறைவுபெற்ற திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.