இன்றைய சூழலில் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு வழங்கும் அல்வா தான், திருநெல்வேலி அல்வாவை விட ஃபேமஸாக இருக்கிறது என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருநெல்வேலியில், முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, இரண்டாவது நாளான இன்று பொதுமக்கள் முன்னிலையில் அவர் உரையாற்றினார்.
அவர் பேசுகையில், "டிசம்பர் மாதத்தின் போது எப்படிப்பட்ட கனமழை பெய்தது என்று எல்லோருக்கும் தெரியும். அதில் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மற்றும் தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அந்த பாதிப்புகளில் இருந்து மீண்டு வருவதற்கு ஒன்றிய அரசிடம் இருந்து நிதி கோரினோம்.
இரண்டு ஒன்றிய அமைச்சர்கள் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆனால், இடைக்கால நிதி உதவி கூட அவர்கள் செய்யவில்லை. நம்முடைய நயினார் நாகேந்திரன் கோவித்துக் கொள்ளக் கூடாது. அவருக்கும் இந்த உண்மைகள் அனைத்தும் தெரியும். ஆனால், அவர் பேசாமல் நான் பேச வேண்டும் என்று அனுமதி கொடுப்பார்.
இருந்த போதிலும், மாநில அரசின் நிதியைக் கொண்டு நிவாரண பணிகளை நாம் மேற்கொண்டோம். தொடர்ச்சியாக நிதி கேட்டு ஒன்றிய அரசை வலியுறுத்தினோம். நிதி கொடுக்காத அவர்களை கண்டித்தோம். நாடாளுமன்றத்தில் பேசிய போதும் அவர்கள் வரவில்லை. நீதிமன்றம் சென்ற பின்னர் தான் தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரண நிதியை, ஒன்றிய அரசு அறிவித்தது.
நாம் ஒன்றிய அரசிடம் நிதியாக, ரூ. 37 ஆயிரத்து 907 கோடி நிதி தர வேண்டும் என வலியுறுத்தினோம். ஆனால், ரூ. 276 கோடி தான் நிதியாக ஒன்றிய அரசு வழங்கியது. நாம் கேட்ட நிதியில் ஒரு விழுக்காடு கூட கொடுக்கப்படவில்லை. இந்த பட்ஜெட்டில் கூட நாம் கேட்ட நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கவில்லை.
தமிழ்நாட்டிற்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என ஒதுக்கி விட்டனர். கூட்டணி கட்சியினர் இருக்கும் மாநிலங்களுக்கும், தேர்தல் வரவிருக்கும் மாநிலங்களுக்கும் மட்டும் தான் பா.ஜ.க அறிவிப்புகளை வழங்குகிறது. இந்திய வரைபடத்தில் மட்டும் தமிழ்நாடு இருந்தால் போதுமா? அரசு வெளியிடும் அறிவிப்புகளில் தமிழ்நாடு இருக்க வேண்டாமா?
தமிழ்நாட்டுக்கு சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட வேண்டாமா? தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்புக்காக தமிழ்நாட்டிற்கு வந்தால் போதும் என நினைக்கிறீர்களா? இப்படி நாம் கேட்கும் கேள்விகளுக்கு பா.ஜ.க-விடமிருந்து பதில் வராது. திருநெல்வேலி அல்வா என்றால் உலக அளவில் ஃபேமஸ். ஆனால், தற்போது மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு தரும் அல்வா தான் அதை விட ஃபேமஸாக இருக்கிறது" எனத் தெரிவித்தார்.