தமிழ்நாடு அரசு தரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கொடுக்கும் வரியை செலுத்த முடியாது என்று கூற ஒரு நொடி போதும் என முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடலூரில், ரூ. 704.89 கோடி மதில்லிலான 602 முடிவுற்ற பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும், ரூ. 384.41 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்வின் ஒரு பகுதியாக ஏராளமான பயனாளிகளுக்கு ரூ. 387 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் முன்னிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, "மாநில அரசு செலுத்தும் நிதியை மத வெறிக்காகவும், இந்தி மற்றும் சமஸ்கிருத திணிப்புக்காகவும் மத்திய அரசு பயன்படுத்துகிறது.
பி.எம் ஸ்ரீ திட்டத்தை ஏற்காததால், தமிழ்நாடு சுமார் ரூ. 5 ஆயிரம் கோடி நிதியை இழப்பதாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகிறார். தமிழ்நாட்டில் இருந்து நீங்கள் பெறும் நிதியை கொடுக்க முடியாது என்று சொல்வதற்கு எங்களுக்கு ஒரு நொடி போதும்.
கொடுத்து பெறுவது தான் கூட்டாட்சி தத்துவம். அதுவே இந்திய அரசியலமைப்பின் அடிப்படை. அதைக் கூட புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியாவை ஆள்வது தான் சாபக்கேடு. கல்வியை வளர்ப்பதற்காக தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்படவில்லை.
இந்தியை வளர்ப்பதற்காக தான் தேசிய கல்விக் கொள்கை கொண்டு வரப்பட்டுள்ளது. நேரடியாக இந்தியை திணித்தால் எதிர்ப்போம் என்று, மறைமுகமாக கல்வி கொள்கை மூலம் திணிக்கப்பார்க்கிறார்கள். தாய்மொழியை வளர்க்கப் போவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார்.
தாய்மொழி தமிழை வளர்க்க எங்களுக்கு தெரியும். இந்தி மொழியால் தங்கள் தாய்மொழியை தொலைத்து நிற்பவர்களிடம் சென்று கேளுங்கள். அப்போது, உங்கள் சதி திட்டத்தின் ஆபத்து புரியும். நீங்கள் வந்து வளர்க்க வேண்டும் என்று தமிழ் உங்களிடம் கையேந்தி நிற்கவில்லை.
மத்திய அரசுக்கு நான் கடுமையான எச்சரிக்கை விடுக்கிறேன். தேன் கூட்டில் கல் எறியாதீர்கள். தமிழர்களின் தனித்துவ குணத்தை மீண்டும் பார்க்க வேண்டும் என ஆசைப்படாதீர்கள். தமிழுக்கு, தமிழ்நாட்டுக்கு, தமிழினத்திற்கு எதிரான எந்த செயல்பாடுகளையும் நான் இருக்கும் வரைக்கும், தி.மு.க இருக்கும் வரைக்கும் கொண்டு வர முடியாது.
திராவிட மாடல் அரசைப் பொறுத்த வரை, மக்கள் முன்னேற்றம் ஒரு புறம்; அதற்கு தடையாக இருப்பதை தகர்ப்பது மறுபுறம். இரு பாதை பாய்ச்சலை தமிழ்நாடு அரசு நடத்தி வருகிறது. இது போன்ற தடைகள் எங்களுக்கு புதிது அல்ல. எங்கள் வெற்றிப் பாதை மக்களின் ஆதரவுடன் என்றும் தொடரும்" எனத் தெரிவித்தார்.