அ.தி.மு.க.வின் துரோக வரலாற்று அடையாளமாக அக்கட்சி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இருக்கிறார் என முதலமைச்சர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று தமிழ்நாடு சட்டமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது. இக்கூட்டத்தில், மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், எதிர்க்கட்சி மற்றும் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு, சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்தனர்.
இந்த அமர்வின் போது தனித் தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பல்வேறு கேள்விகளை முன்வைத்தார். மேலும், இந்த விவகாரத்தில் சரியான முறையில் மாநில அரசு செயல்படவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார். எடப்பாடி பழனிசாமி எழுப்பிய கேள்விகளுக்கு, அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் பதிலளித்தனர்.
இதன் தொடர்ச்சியாக, முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் எடப்பாடி பழனிசாமி குறித்து பதிவிட்டுள்ளார். அதில், "சுரங்கம் மற்றும் கனிமத் திருத்தச் சட்ட வரைவிற்கு நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களித்துவிட்டு, இப்போது சட்டப்பேரவையில் தமிழ்நாட்டின் நலனுக்காகப் பேசுவதுபோல் நடிக்கும் திரு. பழனிசாமி அவர்கள், அவதூறுகளைப் பரப்பி உயிர்வாழும் அ.தி.மு.க.வின் துரோக வரலாற்றுக்கு அடையாளமாய் இருக்கிறார்.
சட்டப்பேரவையில் சொன்னதை மீண்டும் சொல்கிறேன்…
தமிழ்நாட்டுக்கு ஊறு விளைவிக்கும் எந்தத் திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் ஒருபோதும் அனுமதிக்காது!" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“